ஆன்மிகம்
மனதை வசமாக்கும் பாதரச மணிகள்

திரவ நிலையில் இருக்கும் ‘மெர்குரி’ எனப்படும் பாதரசத்தை, திட வடிவம் கொண்டதாக மாற்றி, ஆன்மிக நலன்களுக்கு பயன்படுத்தும் முறை, சித்தர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது.
திரவ நிலையில் இருக்கும் ‘மெர்குரி’ எனப்படும் பாதரசத்தை, திட வடிவம் கொண்டதாக மாற்றி, ஆன்மிக நலன்களுக்கு பயன்படுத்தும் முறை, சித்தர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது. அறிவியல் முறைப்படி பிற உலோகங்களின் கலப்பு இல்லாமல், பாதரசத்தை திடமாக ஆக்குவது சாத்தியமில்லை. பாதரசம், ‘-39’ டிகிரி செல்சியஸ் என்ற குளிர்ந்த நிலையில்தான் திடமான வடிவத்தை அடையும். அதே போல் கிட்டத்தட்ட 350 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையில் தான் உருகும். இது தவிர, உலகில் கண்டறியப்பட்டுள்ள 6 விதமான கடும் விஷங்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கதாகும்.

பல்வேறு பெயர்கள்

பாதரசத்திற்கு.. காரம், சூதம், கற்பம், சாமம், சத்து, சூரியபகை, சாதி, துள்ளி, வீரியம், விண்நீர், விண்மருந்து, ரசம், சுயம்பு, விஜயம், வேதமூல செந்தூரம், பதினெண்பந்தி என்று நிறைய பெயர்கள் இருக்கின்றன. அவற்றை ரசம், ரசேந்திரன், பாரதம், சூதம், மிரசம் என்று ஐந்து வகையாகவும் பிரித் திருக்கிறார்கள். ரசம் என்பது நல்ல சுத்தமாகவும், மெல்லிய சிவப்பு நிறத்துடனும் இருக்கும். ரசேந்திரன் என்பது சுத்தமாகவும், சற்று கருப்பாக இருக்கும். பாரதம் என்பது வெள்ளியை போன்று இருந்தாலும், சுத்திகரிக்கப்பட வேண்டும். சூதம் என்ற வகையானது மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருப்பதாகவும், அதையும் சுத்தப்படுத்தவேண்டிய அவசியம். மிரசம் என்பது கடைசி தரம் கொண்டதாகவும், ஐந்துக்கும் மேற்பட்ட அதன் தோஷங்களை நீக்கிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுப்பொருட்களில் ஒன்றாக உள்ள பாதரசமானது, பஞ்ச பூதங்களில் தண்ணீரும், காற்றும் இணைந்த தன்மை உடையது. பல நிறங்களில் இருந்தாலும் வெண்மைதான் அதிகமாக காணப்படுகிறது. ‘சூதம்’ என்ற விசேஷ பெயர் கொண்ட பாதரசத்தில் சேர்ந்துள்ள தண்ணீர் மற்றும் காற்றை பிரித்து, பக்குவப்படுத்தி மணியாக மாற்றி பயன்படுத்தும் முறைகள் ரகசியமாக உள்ளது. ‘ககன மார்க்கம்’ எனப்படும் வானத்தில் பறக்கும் சக்தியை பெற, ககனமணி மற்றும் வீரமணி போன்ற ரசமணிகளை மந்திர ஜபம் மூலம் உருவேற்றி, வாயில் அடக்கிக்கொண்டு காற்றில் மிதந்து, இன்னொரு இடத்துக்கு செல்வது சித்தர்களுக்கு வழக்கம் என்ற தகவலும் உண்டு.

மூன்று தத்துவங்கள்

பொதுவாக, மனித உடல் ஆரோக்கியமாக செயல்பட, மூன்று தத்துவங்கள் சரியான அளவுகளில் இருப்பது அவசியம் என்று சித்த வைத்திய முறையில் சொல்லப் படுகிறது. அதாவது, உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வாதம், உடலின் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் பித்தம் மற்றும் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் கபம். இந்த மூன்று அம்சங்களால் மனித உடல் இயக்கப்படுகிறது. இம் மூன்றும் தக்க அளவுகளில் இருப்பதற்கு ரசமணிகள் துணை புரிவதாகவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உடலுக்கு உற்சாகம், ரத்த சுத்தி ஆகியவற்றை தருவதோடு, குண்டலினி சக்தியின் ஆரம்ப இடமான மூலாதாரத்தையும் சுத்தி செய்யும் தன்மை கொண்டவையாகவும் ரசமணிகள் இருக்கின்றன. அதனால், அவற்றை அணிபவரது உள்ளொளி தூண்டப்பட்டு, சிந்தனையின் திறம் அதிகரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பாதரச லிங்கம்

சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாதரச லிங்கங்கள் விசேஷமானவையாக இருப்பதற்கு காரணம் உள்ளது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் தன்மைக்கேற்பவும், குறிப்பிட்ட கிரக சக்தியை மையமாகக் கொண்டும், தகுந்த நவரத்தின வகையை லிங்கத்திற்குள்ளே அல்லது அதன் பீடத்தின் கீழே அமைத்து, ஆங்காங்கே பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அந்த லிங்கங்களுக்கு தக்க சமயங்களில் அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை அருந்தி ஆன்மிக நலம் மற்றும் உடல் பலம் ஆகியவற்றை அடைந்திருக்கிறார்கள். மேலும், குறிப்பிட்ட அளவு தூர சுற்றளவுக்கு பாதரச லிங்கத்தின் ஆகர்ஷண சக்தி செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரம்

பாதரசமணி மற்றும் பாதரசலிங்கம் ஆகியவை தனிப்பட்ட குணங்களை பிரதிபலிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்காலங்களில் குழந்தைகளுக்கு அரைஞாண் கயிற்றில் கட்டப்பட்ட ரசமணியானது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் நம்பிக்கை இருந்தது. இடத்திற்கு தக்கவாறு அவற்றை மணியாக மாற்றுவதற்கான செய்முறைகளும் மாறுபடுகின்றன. அதாவது, ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, தக்க முறையில் பதப்படுத்தப்பட்டு மணிகள் அல்லது லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அந்த மணிகளை அணிவது அல்லது லிங்கங்களை ஒருவரது ஜென்ம நட்சத்திர நாளில் வணங்குவது ஆகியவற்றால் நன்மைகள் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

இளமையை பாதுகாப்பதாகவும், அணிபவரது தோற்றத்தை பொலிவுடன் வைத்திருக்கும் தன்மை பெற்றதாகவும் ரசமணி கருதப்படுகிறது. திரவ நிலை உலோகமான பாதரசத்தை மூலிகை சாறுகளால் தூய்மைப் படுத்தி அதே மூலிகை சாற்றால் திடப்பொருளாகவும், மருத்துவ தன்மை கொண்டதாகவும் மாற்றி அணிந்து கொள்ளும் முறையானது ரகசியமான ஒன்றாகவே இன்றளவும் இருக்கிறது. ஜோதிட ரீதியாக ஒருவரது லக்ன அதிபதியாக உள்ள கிரகம், கோட்சார ரீதியாக நல்ல இடத்தில் சுப பலம் அடைந்த தருணத்தில், அந்த கிரகத்தின் மூல மந்திரத்தை உருவேற்றி அணியப்படும் ரசமணியானது பல நன்மைகளை தருவதாக அனுபவ ஜோதிட சித்த வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

புதன் ஆதிக்கம் பெற்றவர்கள்

நவக்கிரகங்களில் அறிவுக்கூர்மையை பிரதிபலிக்கும் புதனுக்கு உரியது பாதரசம் ஆகும். மெர்குரி எனப்படும் புதனின் ஆதிக்கம் பெற்றவர்கள், அதாவது மிதுனம் மற்றும் கன்னி ஆகியவை லக்னம் அல்லது ராசியாக அமைந்தவர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் அல்லது புதன்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர், பாதரச மணியை தமது உடலில் நேரடியாக படுவதுபோல பயன்படுத்துக்கூடாது என்ற எச்சரிக்கை ரசமணி வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பயன்படுத்துவதென்றால், பாதரச மணியை தண்ணீரில் வைத்து, அந்த நீரை குளிப்பதற்காக உபயோகப்படுத்தலாம் அல்லது தெய்வ விக்கிரகமாக வைத்து வழிபடலாம். பொதுவாக, ரசமணியானது கழுத்தில் கருப்பு அல்லது பச்சை வண்ண நூலில் கோர்த்து, மார்பு வரை தொங்கவிட்டு கட்டிக்கொள்வது முறை. வார நாட்களில் புதன் கிழமையன்று ரசமணி நல்ல பலன்களை தருவதாகவும் நம்பிக்கை உண்டு.

பாதரசத்தை மணியாக செய்வதற்கு சித்தர்கள் ‘விராலி’ என்ற மூலிகை இலையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அந்த இலையானது சாறு இல்லாத வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இருந்து சாறு எடுப்பதற்கு ஒரு விசேஷ முறையும் கையாளப்பட்டது. மேலும், கரு ஊமத்தை, ஊமத்தை, கல்தாமரை, குப்பைமேனி, பிரண்டை, கோரக்கர்மூலி, நத்தைச்சூரி, அழுகண்ணி, தொழுகண்ணி, நாயுருவி போன்ற மூலிகைகளை பயன்படுத்தியும் பாதரச மணி உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மலைகளில் கிடைக்கும் சிலவகை மூலிகைகளும் பயன்படுகின்றன.

ரகசிய வழி

குறிப்பிட்ட சில நாட்களில், தேர்ந்தெடுத்த மரத்தின் தண்டு பகுதியில் துளையிட்டு அதில், பாதரசத்தை வைத்து மூடி, குறிப்பிட்ட மரத்தால் செய்யப்பட்ட ‘ஆப்பு’ மூலம் துளை அடைக்கப்படும். குறிப்பிட்ட காலம் சென்ற பிறகு, அதை எடுக்கும்போது உள்ளே வைக்கப்பட்ட பாதரசம், மணியாக மாறி இருக்கும். இந்த முறையானது மிகவும் ரகசியமாக கடைப்பிடிக்கப்பட்ட, சித்தர்கள் வழிமுறையாகும். முக்கியமாக, ரசமணி உருவாக்கப்படுவதில், நவக்கிரக நிலைகளின் அமைப்பு அவசியமானதாக கருதப்பட்டது.

ரசமணியின் உண்மைத்தன்மையை கண்டுபிடிக்க சில வழிகளும் சொல்லப்பட்டுள்ளன. அதாவது, பாதரச மணியை ஒரு இரும்பு பாத்திரத்தில் போட்டு நெருப்பால் சூடேற்றி உருக்க வேண்டும். அது உருகிவிட்டாலும் பின்னர் பழையபடி திடமாக மாறி விடும். இரண்டாவது, கீழே போட்டாலும் சுலபமாக உடையாது. மூன்றாவது, ரசமணியை வலது உள்ளங்கையில் வைத்து நடுவிரலால் தொடும்போது சிறிய அளவிலான மின்சார அதிர்வு உணரப் படும்.

அடுத்த வாரம்: சோழிகள் காட்டும் அதிசய வழிகள்