அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம்: ஆரன்முளாவில் இருந்து இன்று புறப்படுகிறது
சபரிமலை சீசனில் ஆரம்பம் முதலே அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் இருந்தது.;
சபரிமலை,
நடப்பு மண்டல சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் தினமும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் இருந்தது. இதனால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல் உருவானது. இதனை தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு முறையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
சபரிமலையில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடத்தை விட இதே நாளில் 5 லட்சம் பேர் சபரிமலைக்கு அதிகமாக வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்படுகிறது.
26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும். இதனை தொடர்ந்து அந்த தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும். மறுநாள் காலை 10.10-11.30 இடையே மண்டல பூஜை, வழிபாடு நடைபெறும். அன்றைய தினம் தங்க அங்கி அலங்காரத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அத்துடன் மண்டல சீசன் நிறைவடைகிறது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும். ஜோதி வடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அத்துடன் மகரவிளக்கு பூஜை நிறைவு பெறுகிறது.