இஸ்லாம் : அனைவருக்கும் சம நீதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியாளராக இருந்த வேளையில், அவர்களிடம் ஒரு வழக்கு தீர்ப்புக்காக வந்தது. உயர் குலத்தைச் சார்ந்த ஒரு பெண் திருட்டுக் குற்றம் புரிந்தது உறுதியாயிற்று.

Update: 2017-12-19 06:30 GMT
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியாளராக இருந்த வேளையில், அவர்களிடம் ஒரு வழக்கு தீர்ப்புக்காக வந்தது. உயர் குலத்தைச் சார்ந்த ஒரு பெண் திருட்டுக் குற்றம் புரிந்தது உறுதியாயிற்று. பெருமானார் அந்தப் பெண்ணுக்குத் தண்டனையை முடிவு செய்தார்கள். உயர் குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தண்டனையா என்று அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் பதற்றமடைந்தார்கள். அப்பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் எவரையாவது நபிகளாரிடம் சிபாரிசுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தனர்.

நபிகளாரின் அன்புக்குரியவரான உசாமா இப்னு ஜைத் என்பவரை பெருமானாரிடத்தில் பரிந்துரைக்காக அனுப்பி வைத்தனர்.

உசாமாவின் பரிந்துரையைக் கேட்ட நபிகளாரின் முகம் சினத்தால் சிவந்தது. “இறைவன் விதித்த தண்டனையை மாற்றும்படியாகவா நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்” என்று கேட்டார்கள்.

பின்னர் நபிகளார் எழுந்து நின்று சொற்பொழிவு ஆற்றினார்கள்:

“உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்கள் அழிந்ததற்குக் காரணம் என்னவெனில் அவர்களில் செல்வாக்கு மிக்க ஒருவன் திருடினால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். ஆனால் பலவீனமான ஒருவன் திருடி விட்டாலோ, அவன் மீது தண்டனையை நிறைவேற்றி விடுவார்கள். இறைவன் மீது ஆணை! என்னுடைய மகள் பாத்திமா திருடினாலும் நான் அவளுடைய கையைத் துண்டிப்பேன்” (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஒரு தலைவன் எப்படி தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது இலக்கணமாக அமைந்துள்ளது.

முதலில் ஒரு குற்றவாளிக்காக பரிந்துரை செய்வது தவறு என்பதை இந்த சம்பவத்தின் மூலமாக நபிகள் நாயகம் உணர்த்து கிறார்கள். இரண்டாவது பிறப்பு, செல்வம், அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது மிகப் பெரும் அநீதி என்பது உணர்த்தப்படுகிறது. தண்டனைகளை நிறைவேற்றுவதில் ஆளுக்கொரு நீதி என்ற கொள்கை பின்பற்றப்பட்டால், அச்சமூகம் அழிவை நோக்கிச் செல்லும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இன்று நாம் வாழும் சமூகத்தில் பணம், பதவி, செல்வாக்கு படைத்தவர்கள் மிகப் பெரிய குற்றங்கள் செய்தாலும் தப்பி விட முடிகிறது. பலவீனர்கள், சிறிய குற்றம் செய்தாலும் தண்டனை பெறுவது உறுதியாகிறது. இத்தகைய நிலை சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீட்டில் சமநீதி

ஒருமுறை நபித்தோழர் பஷீர் (ரலி) அவர்கள், தம் மகனை அழைத்துக் கொண்டு அண்ணலாரின் அவைக்கு வந்தார். “இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓர் அடிமை (பணியாள்) இருந்தான். அவனை என்னுடைய இந்த மகனுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டேன்” என்று கூறினார். நபிகளார், “நீர் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த நபித் தோழர், “இல்லை” என்றார். அதனைக் கேட்ட நபிகளார், “நீர் கொடுத்த பணியாளரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்; இறைவனுக்கு அஞ்சி வாழும்; குழந்தைகளுடன் சமமாக நடந்து கொள்ளும். நீர் செய்யும் இந்தப் பாவத்திற்கு என்னை ஏன் சாட்சியாக ஆக்கு கின்றீர். நான் ஒருபோதும் கொடுமைக்கு சாட்சியாக விளங்க மாட்டேன். உம்முடைய குழந்தைகள் அனைவரும் உம்முடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நீர் விரும்புகின்றீரா?” என்று நபிகளார் வினவினார்கள். அதற்கு அவர், “ஏன் இல்லை, அவ்வாறு தான் விரும்புகிறேன்” என்றார். நபிகளார் கூறினார்கள்: “அவ்வாறாயின் நீர் இத்தகைய (பாரபட்சமான) செயலைச் செய்யக் கூடாது.”

குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வது மிகப் பெரிய அநீதியாகும். இது குழந்தைகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். குழந்தைகள் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலை உருவாகும். தன்னைப் பெற்றோர்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும். இக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பழிவாங்கும் மனப்பான்மையும், பெற்றோர்களை வெறுக்கும் நிலையும் ஏற்படும்.

இறைவன் எல்லாக் குழந்தைகளையும், ஒரே மாதிரியான அழகு, அறிவு, திறமை ஆற்றல்களோடு படைப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு சிறப்பு உள்ளது. தாம் பெற்ற குழந்தைகளிடமே பாரபட்சம் காட்டுவது நல்ல பெற்றோர்களின் பண்பாக இருக்க முடியாது. வீட்டிலும், நாட்டிலும் சம நீதி பேணப்பட வேண்டும்; ஆளுக்கொரு நீதி அகற்றப்பட வேண்டும்.

உழைப்பின் மேன்மை

ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்தார். “நாயகமே! நான் எனது ஒட்டகத்தைக் கட்டி வைத்து விட்டு (அது ஓடாதிருக்க) இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அதனைக் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டு இறைவனிடம் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று வினவினார். அதற்கு நபிகளார், “அதனைக் கட்டிப் போட்டு விட்டு இறைவன் மீது நம்பிக்கை வைப்பீராக” என்றார்கள். (நூல்: திர்மிதி)

எந்தக் காரியம் வெற்றி பெற வேண்டுமென்றாலும் நம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு பின்னர் இறைவனிடம் முறையிட வேண்டும். எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், இறைவனிடம் மட்டும் முறையிடுவது இறைவனுக்கு விருப்பமானதல்ல. முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே இறைவன் வெற்றியைத் தருகிறான்.

மனித முயற்சியும், இறையருளும் இணையும்போதே மனிதனுக்கு வெற்றி கிட்டுகிறது. இது பற்றி நபிகள் நாயகம் சொன்ன ஒரு கருத்தைக் கவனியுங்கள். “நீங்கள் இறைவன் மீது முறையாக நம்பிக்கை கொள்வீர்களாயின் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை வெறும் வயிற்றுடன் காலையில் கிளம்புகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன.” (நூல்: திர்மிதி).

நபிகளார் பறவைகளை உவமையாகக் கூறி உழைப்பின் மேன்மையைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். பறவைகள் கூட்டிலேயே இருந்து கொள்ளாமல் உணவைத் தேடி வெளியில் பறந்து செல்கின்றன. மனிதர்களும் இவ்வாறே முயன்றால் இறை உதவி கிட்டும்.

-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.

மேலும் செய்திகள்