சுப்ரபாதத்திற்கு பதில் ஆண்டாளின் திருப்பாவை.. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தனித்துவ உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் நடக்கும் திருப்பாவை பாராயணத்தில் தினமும் ஒரு பாசுரம் ஓதப்படும்.;

Update:2025-12-23 16:55 IST

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வைணவ ஆலயங்களில் தனுர் மாதம் (மார்கழி) மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் மட்டும் அதிகாலையில் சுப்ரபாத பாராயணத்திற்கு பதில் ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவை பாசுரங்கள் ஒலிக்கும்.

அவ்வகையில் இந்த ஆண்டு தனுர் மாதம் கடந்த 16-ந்தேதி மதியம் 1.23 மணியளவில் துவங்கிய நிலையில் மறுநாள் முதல், (17-ந்தேதி முதல்) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை சேவை நடந்து வருகிறது. இந்த நிகழ்வு ஜனவரி 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் (கோதை) ஒருவர். ஒரே ஒரு பெண் ஆழ்வாரான இவர், நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். திருப்பாவை என்பது பெருமாளை போற்றி ஆண்டாள் இயற்றிய 30 பாசுரங்களின் தொகுப்பாகும். திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் ஒரு பகுதி. இது, தமிழ் இலக்கியத்தில் மிகப் பிரபலமானது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் நடக்கும் திருப்பாவை பாராயணத்தில், பாராயணத்தார்கள் தினமும் ஒரு பாசுரம் ஓதுவார்கள்.

தோமால, அர்ச்சனை சேவை

பொதுவாக போக சீனிவாசமூர்த்திக்கு பதிலாக ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏகாந்த சேவையும், ஏகாந்தத்தில் மட்டுமே திருப்பாவை பாராயணமும் நடக்கும். ஆனால் தனுர் மாதத்தில் ஏகாந்தத்தில் தோமால சேவை, அர்ச்சனை சேவை நடைபெறும்.

இதன் காரணமாக ஜனவரி 14-ந்தேதி வரை தோமால சேவை, அர்ச்சனை சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது.

ஆர்ஜித சேவைகள் ரத்து

சொர்க்க வாசல் தரிசன நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. 29 முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல் ஜனவரி 2 முதல் 8-ந்தேதி வரை ஏகாந்தத்தில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்