ஆகம முறைப்படி நடந்த தூய்மைப்பணி.. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்
சொர்க்கவாசல் தரிசன டோக்கன் பெற முடியாத பக்தர்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சர்வ தரிசன வரிசைகள் வழியாக சென்று பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படுவது வழக்கம். இந்த பத்து நாட்களிலுமே பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூய்மைப்பணி
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி இன்று நடைபெற்றது. ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை உள்ள சன்னதிகள், பிரசாத அறை, சுவர்கள், மேல்சுவர் உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை அர்ச்சகர்களால் ஆகம முறைபடி நடத்தப்பட்டது. அர்ச்சர்கள் சிறப்பு பூஜை செய்து நைவேத்யம் படைத்தபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியை முன்னிட்டு அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல், உயர் பொறுப்புகளில் உள்ள தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கான விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
தேவஸ்தான அதிகாரி பேட்டி
ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிக்கு பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை, கோவிலுக்குள் உள்ள சன்னதிகள், கோவில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவர்கள், கூரை, பூஜை பொருட்களில் இன்று புனித வாசனை திரவிய நீர் தெளிக்கப்பட்டு, பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. சாஸ்திரங்களின்படி அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை மற்றும் நைவேத்யம் படைத்தபின், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
விரிவான ஏற்பாடுகள்
டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறும் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் இரண்டு மாதங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். கோவிலுக்குள் நுழையும் வழி மற்றும் வெளியேறும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அன்ன பிரசாதம், தங்குமிடம், தரிசன வரிசையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பார்க்கிங் வசதிகள் குறித்த முழுமையான திட்டங்களை தயாரித்துள்ளார்கள்.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை
மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதலின்படி, வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு வாரியக் கூட்டம் நடத்தப்பட்டு, சாதாரண பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
டிசம்பர் 30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வைகுண்ட துவாதசிக்கு e-DIP அமைப்பு மூலம் சாதாரண பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து பக்தர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கில், ஐந்து நாட்களுக்கு e-DIP பதிவுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சுமார் 24 லட்சம் பக்தர்கள் பதிவு செய்திருந்தனர். முதல் மூன்று நாட்களுக்கு e-DIP மூலம் 1.89 லட்சம் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேரத்தை சரியாக பின்பற்றுங்கள்
டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு வர வேண்டும். இந்த மூன்று நாட்களுக்கு டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தின்படி அவர்கள் தரிசனத்திற்கு வந்தால், இரண்டு மணி நேரத்திற்குள் எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்து திரும்பிவிடலாம்.
e-DIP மூலம் டோக்கன் பெற முடியாத பக்தர்கள் கடைசி ஏழு நாட்களில், அதாவது ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சர்வ தரிசன வரிசைகள் வழியாக சென்று பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. e-DIP அமைப்பு மூலம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், கடைசி ஏழு நாட்களுக்கு பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து சர்வ தரிசன வரிசைகள் வழியாக தரிசனம் செய்யலாம்.
கட்டண தரிசன டிக்கெட்
ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் (ரூ.300) மற்றும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 15 ஆயிரம் எண்ணிக்கையில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும், 1500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
உள்ளூர் மக்களுக்கு..
ஜனவரி 6, 7, 8 ஆம் தேதிகளில் உள்ளூர்வாசிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் திருப்பதி மற்றும் திருமலை உள்ளூர்வாசிகளுக்கு தினமும் 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும்.
சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவதால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகவானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் உணவு பிரசாதங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 3500 காவல்துறையினரும் 1150 டிடிடி விஜிலென்ஸ் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க திட்டமிட்டபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனைத்து பக்தர்களும் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பகவானைத் தரிசித்து அருள் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.