பெரம்பலூர் பகுதியில் மகா சிவராத்திரி விழா

பெரம்பலூர் பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Update: 2018-02-13 23:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சந்திரசேகரர்-ஆனந்தவள்ளி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளை ரிஷப வாகனத்தில் வைத்து வண்ணமலர்களால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா சிவராத்திரி விழா தொடங்கியது. கோவில் சன்னதியில் நேற்று இரவு முதல் 4 கால ருத்ர அபிஷேக ஆராதனைகள், விடிய விடிய நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ருத்ரபாராயணம், பன்னிரு திருமுறைகள், சிவபுராணத்தை பாராயணம் செய்து வழிபட்டனர். பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 2 கால ருத்ர வேள்வி பூஜைகள் நடந்தன. இதில் குரும்பலூர் பாளையம், ஈச்சம்பட்டி, கே.புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வாலீஸ்வரர் கோவில், வெங்கனூரில் உள்ள விருத்தாம்பிகை சமேத விருத்தாசல ஈஸ்வரர் கோவில், குன்னம் தாலுகா எஸ்.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்த ஈஸ்வரர் (அபராத ரட்சகர்) கோவில், குன்னம் ஆதிகும்பேசுவரர் கோவில், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளத்தில் உள்ள குபேர தலமான ஏகாம்பரேசுவரர் கோவில், பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள சிவன் கோவில், லாடபுரத்தில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தது.

மேலும் செய்திகள்