பிரளயத்தில் இருந்து காத்த ஈசன்

விருத்தாசலம்- திருச்சி நெடுஞ்சாலையில் மேற்கே 17 கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.

Update: 2018-02-21 08:31 GMT
தேவகன்னியர், காமதேனு, ஐராவதம், இந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நான்கு திசைகளிலும் இறைவனைத் தரிசிக்கும் வசதி அமைந்த ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். தேவ கன்னியாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் அனைத்தும் சேர்ந்து பெண்+ஆ+கடம்= பெண்ணாடகம் ஆனது. இதுவே மருவி பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது.

தேவேந்திரன் தன் சிவ பூஜைக்கு மண்ணுலகில் இருந்து பூக்களைக் கொண்டுவர தேவகன்னியரைப் பணித்தான். அவர்கள் நடுநாட்டில் அமைந்துள்ள பெண்ணாடகத்து சிவாலய நந்தவனத்தில் இருந்த பூக்களின் அழகால் கவரப்பட்டனர். அந்த மலர்களைப் பறித்த அத்தல இறைவனுக்கு பூஜை செய்தனர். தேவ கன்னியர்கள் வராததால், இந்திரன் காமதேனுவை அனுப்பினான். அதுவும் இத்தலத்தில் மயங்கி, இறைவன் மீது பால் சொரிந்தது.

தொடர்ந்து வெள்ளை யானையை இந்திரன் அனுப்பி வைத்தான். அது இத்தலம் வந்து தன் பசிக்குத் தேவையான கரும்பும், வாழையும் உண்டு, அங்குள்ள இறைவனை கண்டு மகிழ்ந்து தன்னிலை மறந்தது. இறைவனுக்கு தானே மண்டபமாக நின்றி நிழல் தந்தது. பூக்களைப் பறிக்கச் சென்ற ஒருவரும் திரும்பாததால், இந்திரனே பூலோகம் வந்தான். அவனும் இத்தல இறைவனால் ஈர்க்கப்பட்டு, வழிபாடு செய்து பின் தேவலோகம் திரும்பினான்.

தல வரலாறு

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர் களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் ‘பிரளயகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆலய அமைப்பு

இவ்வாலயம் கிழக்கு நோக்கி எளிய நுழைவு வாசலைக் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்ததும், குடைவரை விநாயகர் அமந்துள்ளார். இதன்பின் கிழக்கு நோக்கிய அபூர்வ நந்தி, ஐந்துநிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. இடதுபுறம் அன்னை அழகிய காதலி சன்னிதி தனிக் கோவிலாக விளங்குகிறது.

ராஜகோபுரத்தைக் கடந்ததும், சுவாமியை நோக்கியபடி கலிக்கம்பர், மெய்கண்டார் சன்னிதிகள் உள்ளன. அருகே நடராஜர் சன்னிதியும் காணப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடம், கொடிமரம், கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்திதேவர் காட்சிதர, பிரளயகாலேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இவர் எண்பட்டை வடிவில் சதுர வடிவ ஆவுடையாரில், பிரம்மாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிட்சாடனர், சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருமேனி காணப்படுகிறது. இது தவிர, தனி துர்க்கையம்மன் சன்னிதியும் கூடுதலாக அமைந்துள்ளது.

ஆலய பிரகாரத்தில் கோடி விநாயகர், நால்வர், சந்தனக் குரவர்களான மெய்கண்டார், மறைஞானசம்பந்தர் மற்றும் கலிக்கம்பர், சேக்கிழார், தண்டபாணி ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. உற்சவமூர்த்தி மண்டபம், சப்தகன்னியர், நாகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், நடராஜர் சபைக்குப் பின்புறம், பைரவர் மற்றும் சூரியபகவான் சன்னிதிகளும் உள்ளன.

கட்டுமலைக்கோவில்

சுவாமியின் கருவறை ஒட்டி 30 மீட்டர் உயரத்தில் சவுந்தரேஸ்வரர் வாழும் மலைக்கோவில், ஏறவும், இறங்கவும் படிக்கட்டுகள் கொண்டு அமைந்துள்ளது. இதனை ‘கட்டுமலைக் கோவில்’ என்று அழைக்கின்றனர்.

இவ்வாலயம், சவுந்திரவல்லி என்ற அடியாரால் எழுப்பப்பட்ட ஆலயம் என்றும், அவரின் விருப்பத்திற்காகக் காட்சி தரும் விதமாக உயரத்தில் இருந்து இறைவன் அருளினார் என்றும் கூறப்படுகின்றது.

அழகிய காதலி

சண்டிகேஸ்வரர் சன்னிதியின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் எளிய நுழைவு வாசல் மூலம் அழகிய காதலி அம்மன் ஆலயத்தை அடையலாம். பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் இதனைக் கடந்ததும் துவாரபாலகிகள் இருவர் காட்சி தர, கருவறையின் உள்ளே எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். ஆமோதனம்பாள், கடந்தை நாயகி என்ற வேறு பெயர்களும் அன்னைக்கு உள்ளன.

ஆலயத்தின் தல மரம் தலமரம் செண்பக மரமாகும். தலத் தீர்த்தம் தெற்கே ஓடும் வெள்ளாறு ஆகும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் பெண்ணாடம் அமைந்துள்ளது. விருத்தாசலம்- திருச்சி நெடுஞ்சாலையில் மேற்கே 17 கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. 

கலிக்கம்பர்

அறுபத்துமூவரில் ஒருவரான கலிக்கம்பர் அவதரித்த தலம் இது. வணிகர் குலத்தில் தோன்றிய இவர், தன் இல்லம் நாடி வருபவர் சிவனடியார் களுக்கு பாதபூஜை, அன்னம் பாலிப்பு செய்து வழிபடுவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு வந்த சிவனடியார்களில், தன் வீட்டில் பணி புரிந்தவரும் இருந்ததால், அவரின் பாதத்திற்கு நீர்வார்க்கத் தயங்கினார், கலிக்கம்பர் மனைவி. சிவனடியார் என்பதையே சிந்தையில் கொண்ட கலிக்கம்பர், இதனால் கோபம் கொண்டு மனைவியின் கையைத் துண்டித்தார். கலிகம்பரின் தீவிர பக்தியை மெச்சிய ஈசன், அவரது மனைவிக்கு இழந்த கையை மீண்டும் வழங்கி இருவருக்கும் கயிலைப்பேறு தந்தருளினார். இவர் வாழ்ந்த இடத்தில் தனிக்கோவில் ஒன்று ஆலயத்தின் அருகே கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது. 

சந்தானக்குரவர்கள்

சந்தானக் குரவர்கள் நால்வரில் இருவர் சிதம்பரத்திலும், மற்ற இருவர் பெண்ணடாகத்திலும் தோன்றியவர்களாவர். மெய்கண்ட நாயனார், மறைஞான சம்பந்தர் இருவரும் இத்தலத்தில் அவதரித்த அருளாளர்கள். மெய்கண்டாருக்கான திருவாவடுதுறை ஆதின ஆலயம், அச்சுத களப்பாளர் மேடு என்ற அவதார இடத்திலும், மறைஞானசம்பந்தர் மடம் பெண்ணாடகத்தில் உள்ள காமராஜர் தெருவிலும் அமைந்துள்ளன. 

அப்பரின் தோளில் இலச்சினை

தனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய இவர், ‘சமணருடன் வாழ்ந்த இவ்வுடலோடு நான் எப்படி உயிர் வாழ்வேன். இவ்வுடலை நான் ஏற்கும் பொருட்டு என் தோள்களில் உமது இலச்சினையை பொறித்தருள வேண்டும்’ என்று இத்தல இறைவனிடம் வேண்டி நின்றார். அதற்கு இசைந்த இறைவன், இவரின் தோள்களில் சூலம், இடபம் ஆகிய குறி களைப் பொறித்தார் என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்