நபிகள் மீது அன்பை வளர்ப்போம்...

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி நன்மை, தீமைகள் குறித்து தங்களது தோழர்களிடம் எடுத்துச் சொல்லுவதுண்டு.

Update: 2018-04-25 07:39 GMT
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி நன்மை, தீமைகள் குறித்து தங்களது தோழர்களிடம் எடுத்துச் சொல்லுவதுண்டு. அப்போது, ‘ஒருவர் தனது செயல்கள் மூலம் மறுமையில் சொர்க்கம் அல்லது நரகத்தை பெற்றுக் கொள்வார்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

இதைக்கருத்தில் கொண்ட தோழர்கள், ‘நபிகளாருக்கு மறுமை குறித்த விளக்கங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்’ என்று கருதினார்கள். இதனால் நபிகளிடம் மறுமை குறித்த விவரங்களை அடிக்கடி கேட்டு வந்தார்கள்.

ஒரு முறை நபித்தோழர் ஒருவர் நபிகளாரை அணுகி இவ்வாறு கேட்டார்:

“இறைத்தூதரே, நான் உங்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன். என் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென உங்கள் நினைவு வந்தால், அதனை அப்படியே விட்டு விட்டு ஓடோடி வந்து உங்களை உள்ளங்குளிர பார்ப்பேன். அப்போது தான் என் மனம் சாந்தியடையும். ஆனால் இப்போது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நம் இருவரின் வாழ்க்கையும் இப்படியே எத்தனை காலம் சென்று கொண்டிருக்கும்? ‘எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுகித்தேயாக வேண்டும்’ (திருக்குர்ஆன் 3:185) என்பது இறைவனின் வாக்கு. அப்படியானால் நாம் அனைவருக்கும் மரணம் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் சொர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பீர்கள். அப்போது, என் நிலை என்னவாகுமோ நான் அறியேன். அந்த தருணத்தில் எனக்கு உங்களின் ஞாபகம் வருமானால், நான் உங்களை வந்து நேரில் சந்தித்து மனம் அமைதி பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?”

இவ்வாறு அந்த நபித்தோழர் கவலையுடன் கேட்டார்.

அண்ணல் நபிகள் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அமைதியாக இருந்தார்கள்.

இந்த நிகழ்வுகளை கண் காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ், அந்த நல்லடியாரின் கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக கீழ்க்கண்ட வசனங்களை இறைச்செய்தியாக இறக்கினான்:

“எவர்கள் அல்லாஹ்விற்கும்; அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ் அருள் செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்க போரில் உயிர் நீத்த தியாகிகள், நல்ஒழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் மறுமையில் வசிப்பார்கள். இவர்கள் தான் மிக அழகான தோழர்கள்” (திருக்குர்ஆன் 4:69)

இந்த வசனம் இறங்கியவுடன் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், அதனை தன் தோழருக்கு ஓதிக்காட்டி விவரம் சொன்னார்கள். தொடர்ந்து, “என் மீது அன்பு கொண்டவர்கள், இருவிரல்கள் இணைந்திருப்பது போல நாளை மறுமையிலும் என்னுடனேயே இருப்பார்கள்” என்று தன் இருவிரல்களையும் இணைத்து காட்டினார்கள்.

தன் பொருட்டால் ஓர் இறைவசனம் இறங்கியதை நினைத்த அந்த நபித்தோழர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமல் போயிற்று.

இன்னுமொரு முறை இன்னொரு நபித்தோழர், அண்ணல் நபியை அணுகி, “நபியே! நாயகமே, நீங்கள் அடிக்கடி சொல்லும் மறுமை என்பது எப்போது நிகழும்? எனக்கு கொஞ்சம் விவரித்து சொன்னால் நன்றாயிருக்குமே?” எனக்கேட்டார்.

அப்போதும் நபிகளார் மவுனம் சாதித்தார்கள். அந்த நேரத்தில் இறைவனின் இறைச்செய்தியாய் இந்த திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:

“நபியே! இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றியும், அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: ‘அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக்கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்று தான் உங்களை வந்தடையும்’. அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: ‘அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது’. ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்” (7:187).

இந்த இறை வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை அல்லாஹ் மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றான். ‘மகஸர்’ என்ற மறுமை நாள் ஏற்பட்டே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம் அது எப்போது ஏற்படும்?, எப்படி ஏற்படும்? என்பதையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. எனவே தான் நபிகளாருக்கு கூட அது தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், மக்கள் ஆர்வம் மிகுதியால், நபிகளாருக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், மறுமைநாள் பற்றி கேட்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் இந்த வசனம் மூலம் தெளிவு படுத்துகிறான்.

இந்த இறை வசனத்தை ஓதிக்காட்டிய நபி பெருமானர் (ஸல்) அவர்கள், அந்த நபித்தோழரை அழைத்து, ‘மறுமையைப் பற்றி அறிவதற்கு இத்தனை ஆர்வம் காட்டுகிறீர்களே?, அதை எதிர்கொள்வதற்கு என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

நபித்தோழர் சற்றும் சிந்திக்கவில்லை, “அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டுள்ளேன். நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்களே, ‘என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவன் நாளை மறுமையில் என்னோடு ஒன்றாய் இணைந்திருப்பான்’ என்று. எனவே நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன். அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வாக்கு சத்தியமானது” என்று மனம் மகிழ்ந்தவர்களாக தன் பதிலை பதிவு செய்தார்கள்.

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள், நபி பெருமானோடு பேசிக்கொண்டிருந்த போது, அண்ணலை நோக்கி, “எங்களின் நாயகமே! நான் இந்த உலகின் எல்லா பொருட்களையும் விட உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், என் உயிரைத் தவிர” என்று சொன்னார்கள்.

உடனே நபியவர்கள், “உமரே! நீங்கள் உங்கள் உயிரை விட என் மீது அதிக அன்பு கொள்ளாதவரை உங்கள் ஈமான் (இறையச்சம்) பரிபூரணமாவதில்லை?” என்றார்கள்.

பதறிப்போன உமர் (ரலி) அவர்கள் உடனே, “நபியே! நிச்சயமாகச் சொல்கிறேன். நான் என் உயிரை விட உங்களை அதிகமாய் நேசிக்கின்றேன்” என்றார்கள்.

அண்ணல் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.

ஈமானின் உறுதிப்பாட்டில் மிக அழுத்தமாய் நிலைத்திருந்த அருமை சஹாபா பெருமக்களையே, ‘நபிகள் மீது தங்கள் உயிரை விட அதிக அன்பு கொள்ளாதவரை அவர்களின் ஈமான் பரி பூரணமாவதில்லை’ என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள். அப்படி என்றால் ஈமானில் பலவீனமாய் அடித்தட்டில் உள்ள நம் போன்றவர்களின் நிலைமை என்னவாகும்?

அண்ணல் நபிகள் மீது அன்பை வளர்ப்போம், மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.

(தொடரும்)

மேலும் செய்திகள்