ஆன்மிகம்
நற்பேறு பெற்றவர் யார்?

திருப்பாடல்களில் வரும் முதல் பாடல் நற்பேறு பெற்றவரின் குணாதிசயங்களை ‘பளிச்’ என விளக்குகிறது.
நற்பேறு பெற்றவர் யார்?

அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்;

இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;

அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் (சங்கீதம் 1)

முதல் திருப்பாடல் மக்களுக்கு அறிவுரை சொல்கின்ற திருப்பாடலாக அமைந்திருப்பது சிறப்பு.

பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த திருப்பாடலைச் சொல்லிக் கொடுத்து அதன்படி நடக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. திருப்பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று இது எனலாம்.

சாலமோன் மன்னனுடைய நீதிமொழிகளின் சாயல் இந்த பாடலில் தொனிப்பதால், இதையும் சாலமோன் எழுதியிருக்கலாம் என கருதுவோர் உண்டு. எனினும், இதை எழுதியவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த பாடலுக்கு ஆசிரியர் அமைகிறார்.

நல்லவர் எப்படி இருப்பார்?, பொல்லார் எப்படி இருப்பார்? என்பதை இந்த பாடல் விளக்குகிறது.

நல்லவர்களின் குணாதிசயங்களாக மூன்று விஷயங்கள் இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.

1. அவர்கள் பொல்லாரின் சொற்படி நடக்க மாட்டார்கள். வழி தவறுவதன் முதல் நிலை இது. யாருடைய அறிவுரைப்படி நாம் வாழ்கிறோம் என்பதன் அடிப்படையில் தான் நமது வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது. பொல்லாரின் அறிவுரைகளை சிரமேற்கொள்ளும் போது நாம் பொல்லாதவர்களின் இலக்கையே சென்றடைவோம். அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.

2. இரண்டாவது நிலை, தீயவர்களின் பாவ வழியில் நிற்காமல் இருப்பது. பொல்லாரின் சொல்லைக்கேட்பது முதல் நிலை. பாவிகளுடைய வழியில் நிற்பது இரண்டாம் நிலை. இப்போது நின்று கேட்கக்கூடிய அளவுக்கு மனம் பாவத்தின் மீது விருப்பம் கொண்டு விடுகிறது. நின்று நிதானித்து பாவத்தின் வழியில் பயணிக்கிறது. அதை நல்லவர்கள் நாடமாட்டார்கள்.

3. மூன்றாவது நிலை, இகழ்வாரின் கூட்டத்தில் அமராமல் இருப்பது. முதலில் கேட்பது, பின் நிற்பது, மூன்றாவதாக ஆறஅமர அமர்ந்து இகழ்வாரோடு இணைந்திருப்பது, என பாவம் படிப்படியாய் வளர்கிறது. பிறரை இகழ்வதும், நல்ல செயல்கள் செய்பவர்களை இகழ்வதுமாய் பாவத்தின் ஆழத்தில் விழுந்து விட்ட நிலையை இது காட்டுகிறது.

முதலில் வெறுமனே பொல்லாரின் அறிவுரைகள் கேட்பதில் நமது வாழ்க்கை பலவீனமடையத் தொடங்கு கிறது. அது சிற்றின்பத் தேடல்களாகவும் இருக்கலாம், இயேசுவின் போதனைகளைத் திரிப்பதாகவும் இருக்கலாம்.

அது பழகிவிட்டால் பாவிகள் நடக்கின்ற பாதையில் நாமும் தென்படுவோம். அங்கே நின்று பாவத்தின் செயல்களைச் செய்வோம். நாமும் நாலுபேருக்கு தவறான அறிவுரைகள் சொல்வோம். அதுவும் பழகிவிட்டபின் நல்லவர்களை விமர்சிப்பதும், மனிதநேயமற்ற இகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் செய்வதுமாய் நமது வாழ்க்கை அர்த்தம் இழக்கும்.

இப்படிப்பட்ட மூன்று நிலைகளையும் நல்லவர்கள் வெறுப்பார்கள். வெறுமனே வெறுத்தால் மட்டும் போதாது, ஒரு பாத்திரத்தில் இருக்கும் அழுக்குத் தண்ணீரை வெளியேற்றுவதுடன் வேலை முடிவதில்லை. வெறுமையான பாத்திரம் யாருக்கும் உதவாது. அந்த பாத்திரத்தைக் கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றுவது தான் பயனுள்ள நிலை. நல்லவர்கள் தங்களை பொல்லாரின் வழியிலிருந்து விலக்கி, இறைவனின் அருகில் அமர்வார்கள்.

இறைவனுடைய திருச்சட்டத்தில் மகிழ்ந்து, இரவும் பகலும் அவர்கள் அதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் செய்கின்ற செயல்களெல்லாம் வெற்றியாக முடிந்து விடுகிறது. நீரோடையில் அருகில் வேர்களை இறக்கி, பருவகாலத்தில் இனிய கனியைத் தரும் மரமாய் அவர்கள் மாறுகின்றனர்.

ஒரு மரம் கனியைத்தர நீர், காற்று, சூரிய ஒளி மூன்றும் தேவை. காற்று என்பதை நமக்கு மூச்சுக்காற்றை அளித்த தந்தையாம் இறைவனோடும், ஒளியை ஒளியாம் இறைமகனோடும், நீரை தூய ஆவியானவரோடும் ஒப்பிடலாம். இவர்கள் மூவரும் நம்முள் இருக்கும் போது நாம் நீரோடை மரம் போல செழுமை வடிவும், இனிமைக் கனியுமாய் வாழ்வோம்.

பொல்லாரின் வழியோ, காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல நிலையில்லாமலும், பயனில்லாமலும் அழியும். அவர்களுக்கு வெற்றி என்பது இல்லை. அவர்களுக்கு மீட்பு என்பது இல்லை. அழிவு மட்டுமே அவர்களின் பரிசு.

நமது வாழ்க்கை, தீமையின் வழியை விட்டு விலகி இறைவனைத் தேடும் வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்பதை இந்த திருப்பாடல் வலியுறுத்துகிறது.

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ செய்ய வேண்டிய இந்த மூன்று விஷயங்களையும் இதயத்தில் இருத்துவோம். பொல்லாரின் வழி செல்வதை இன்றே நிறுத்துவோம்.

-சேவியர், சென்னை.