விரும்பிய வரம் அருளும் விழுப்புரம் கயிலாசநாதர்

விழுப்புரத்தில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

Update: 2018-07-24 10:32 GMT
தல வரலாறு

சிவபெருமானை தரிசித்து அவரிடம் அர்ச்சனை செய்த மலர் ஒன்றைக் கையில் ஏந்தியபடி வந்தார், துர்வாச முனிவர். அப்போது எதிரே ஐராவதம் என்ற யானையின் மீது அமர்ந்து வந்த இந்திரனைக் கண்டார். தன்னிடம் இருந்த மலரை, இந்திரனுக்கு வழங்கினார் முனிவர். யானை மேலிருந்த இந்திரன், அங்குசத்தினால் அம்மலரை வாங்கி, யானையின் தலைப்பகுதியில் வைத்தான். மறு நொடியே யானை தன் தலையில் இருந்த மலரை கீழே தள்ளி, காலால் மிதித்தது.

இதனைக் கண்டு கோபமுற்ற துர்வாச முனிவர், ‘சிவபெருமானின் மலரை அவமதித்ததால், உன் செல்வங்கள் அனைத்தும் உன்னை விட்டு விலகட்டும்’ என்று இந்திரனுக்கு சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தால், தன்னுடைய சக்தியையும், செல்வங்களையும் இழந்த இந்திரன், அசுரர்களுடன் போரிட வேண்டிய நிலைக்கு விதி வசத்தால் இழுத்துச் செல்லப்பட்டான்.

இதையடுத்து திருமாலிடம் சரணடைந்த இந்திரன், சாப விமோசனம் வேண்டி நின்றான். பாற்கடலில் தோன்றும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாபம் நீங்கும் என அறிவுறுத்தினார், திருமால். அதன்படி, அசுரர்களின் துணை கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது நஞ்சு வெளிப்பட்டது.

அந்த ஆலகால விஷத்திற்கு அஞ்சிய தேவர்கள் அனைவரும், சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். எம்பெருமான் நஞ்சை உண்டார். அது அவரது உடலுக்குள் செல்லாமல் இருக்க, அன்னை பார்வதி ஈசனின் கழுத்தைப் பிடித்தாள். இதனால் நஞ்சு கழுத்திலேயே தங்கிவிட்டது. அவரது கழுத்து நீல நிறமாக மாறிது. இதனால் சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.

நஞ்சை உண்ட பிறகு இத்தலம் வந்து மவுனமாக வீற்றிருந்தார். அனைவரும் நீலகண்டரை வழிபட்டனர். துயர் அடைந்தவர்கள் இன்பம் பெறும் வகையில், ஏழரை நாழிகை எனும் சாம நேரத்தில் சிவபெருமான் அருள் செய்தார் என தலபுராணம் கூறுகிறது.

ஆலய அமைப்பு

இத்தல இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய், வட்டவடிவ ஆவுடையாரில் காட்சியளிக் கிறார். விஜயநகர மன்னர்கள் காலத்திய நந்தி மண்டபம், மகா மண்டபம், இதன் தென்புறம் அரிதான வடக்கு பார்த்த முருகர் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகா மண்டபம் நாயக்கர் காலத்தைச் சார்ந்தது. அர்த்த மண்டபம் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோவிலுக்குரிய சிற்பங்களில் பழமையானது, பிட்சாடனர் சிலையாகும். இது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கலை வேலைப்பாடுகள் கலந்த நிலையில் கோவில் அமைந்துள்ளது.

அன்னையின் திருநாமம் பிரகன்நாயகி எனும் பெரியநாயகி. இவரது சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அன்னை மேற்கு நோக்கி, மேல் இரு கரங்களில் தாமரை மலர் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தல மரம் வில்வமாகும். தல தீர்த்தம் எதுவும் இல்லை.

இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள் வசந்த உற்சவம் நடக்கிறது. இது தவிர நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா தரிசனம் ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

திருமணம் வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவிப்பார்கள். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதன்மூலம் திருமணத்தடை நீங்கி, விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இறைவனை தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

விழுப்புரம் மாநகரின் வடகிழக்குப் பகுதியில், திரு.வி.க. சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும், புகழ்மிக்க ஆஞ்சநேயர் கோவிலின் வெகு அருகிலும் இந்த ஆலயம் இருக்கிறது. விழுப்புரத்தில் வைகுந்தப் பெருமாள், வாலீஸ்வரர் ஆகிய பழம்பெரும் கோவில்களும், புகழ்பெற்ற ஆஞ்சநேயர், வீரவாழியம்மன் கோவிலும் அமைந்துள்ளன. பழமையான சத்திரங்களும் உள்ளன. 

தொன்மைச் சிறப்பு

இன்றைய விழுப்புரம், மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊராகும். பல்லவர் காலத்தில், நிருபதுங்கவர்மன் பெயரால் ‘விஜயநிருபதுங்க ஜெயந்தாங்கி சதுர்வேதி மங்கலம்’ எனவும், முதலாம் ராஜராஜன் காலத்தில் ‘ஜனநாத சதுர்வேதி மங்கலம்’ எனவும் வழங்கப்பட்டது. பிற்கால சோழர் காலத்தில் விழுப்பரையன் என்பவன் பெயரால், ‘விழுப்பரையபுரம்’ என விளங்கியது. கி.பி. 1265-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலேயே இது ‘விழுப்புரம்’ என வழங்கப்பட்டிருக்கிறது. வைகுந்தவாசப்பெருமாள் ஆலய கொடிக் கம்பத்தில், விழுப்புரம் எனும் ஜனகாபுரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொன்மையான பின்னணி கொண்ட விழுப்புரத்தில், சோழமன்னர் முதலாம் ராஜராஜன் காலத்திற்கு முன்பே கயிலாசநாதர் திருக்கோவில் அமைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். முதலாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன், ராஜநாராயண சம்புவராயன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், விருப்பண்ண உடையார், சாளுவ நரசிங்கராஜ உடையார், நரசிங்க நாயகர், கிருஷ்ண தேவராயர் அச்சுததேவ மகாராயர், சதாசிவ தேவராயர், இரண்டாம் ஸ்ரீரங்கதேவர் முதலான மன்னர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணி நடந்துள்ளதை அறியமுடிகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாலயம், விஜயநகர மன்னன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் செய்திகள்