சிவபதம் தரும் திருக்கயிலைக் காட்சி

திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

Update: 2018-08-07 06:38 GMT
திருக்கயிலை நாதனைக் காணச்சென்ற காரைக்கால் அம்மையார், ஈசனின் கயிலையை காலால் மிதிக்க அஞ்சி தன் தலையாலேயே நடந்து சென்றார். சுந்தரர் அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் வெள்ளை யானையிலும், சேரமான் பெருமாள் நாயனார் அவரது குதிரையிலும் திருக்கயிலையை சென்றடைந்தனர். அவ்வையார் விநாயகப்பெருமான் மூலம் திருக்கயிலையை அடைந்து தரிசித்தார். இப்படி அருளாளர்கள் மட்டுமே கண்டு தரிசித்த திருக்கயிலை அம்மையப்பன் தரிசனத்தை, பூலோகத்தில் பக்தர்களாகிய நமக்குப் பெற்றுத்தரும் பவித்திரமான புண்ணியத்தலம் திருவையாறு ஆகும்.

திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்தின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு ‘திருவையாறு’ என்று பெயர். திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல்,திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி, சில மகரிஷிகள் தெரிவித்தனர். ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது கடினம். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது நிலையை எடுத்துரைத்தான்.

துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார். ஈசன் மனமிரங்கி நந்தி தேவரிடம் கூறி திருக்கயிலையை திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும் திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து, இந்த தலத்தில் ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார். இதன் காரணமாக இந்த தலம் ‘பூலோக கயிலாயம்' என்று அழைக்கப்படுகிறது. இதனை உணர்த்தும்வண்ணம் இத்தலத்தில் தென் கயிலாயம், வட கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன.

‘பூலோக கயிலாயம்’ என்று அழைக்கப்படும் இத்தல ஈசன், சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார். மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். லிங்கத்திற்கு புணுகு சாத்தப்படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். இங்குள்ள அம்பாள் அறம்வளர்த்த நாயகி என்ற திருநாமத்துடன் கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார். இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது. அப்போது ஐயாறப்பரே, அந்த அர்ச்சகரின் வடிவில் வந்து தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட புண்ணிய பூமியாகவும் இந்த இடம் திகழ்கிறது. இந்நிகழ்வை ‘ஐயாறு அதனில் சைவனாகியும்' என்று தமது திருவாசகத்தில் பதிந்துள்ளார் மாணிக்கவாசகர். கருவறையில் ஐயாறப்பரின் சடை இன்றும் வளர்வதாக ஐதீகம். எனவே முதல் பிரகாரத்தில் வலம் வந்தால் ஈசனின் சடையை மிதிக்கும் பாவம் உண்டாகும் என்பதால், இங்கு பக்தர்கள் வலம் வர தடை செய்யப்பட்டுள்ளது.

சிவபெருமான் திருக்கோவில் கொண்ட தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டு வந்தார் அப்பர் என்னும் திருநாவுக்கரசர். அனைத்து தலங்களையும் தரிசித்து விட்ட அவர், திருக்கயிலையைக் காணும் ஆவல் கொண்டார். இதற்காக கயிலை நோக்கிச் சென்றார். வயோதிகத்தால் அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை. கைகளை தரையில் ஊன்றிச் சென்றார், மார்பால் ஊர்ந்து சென்றார். இதனால் அவரது உடல் அங்கங்களில் எல்லாம் காயங்கள் ஏற்பட்டு விட்டன.

அப்போது அவரை சோதிக்க எண்ணிய ஈசன், திருநாவுக்கரசர் முன்பாக முனிவர் வேடத்தில் தோன்றினார். ‘அன்பனே! இந்த மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்' என்றார்.

ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘நாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் (மானசரோவர்) மூழ்கி திருவையாறு திருத்தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்' என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாறு கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தம் எனும் உப்பங்கோட்டை பிள்ளை கோவில் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் எழுந்தார். அங்கு இறைவன் கயிலைக் காட்சியை காட்டி அருளினார். திருநாவுக்கரசருக்கு இறைவன் கயிலைக் காட்சி காட்டிய தினம் ஆடி அமாவாசை ஆகும்.

ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று, இந்தத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபாடு செய்தால் முக்தியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்து உள்ளது. 

மேலும் செய்திகள்