ஆன்மிகம்
உங்கள் குடும்பத்தை தேவன் நடத்துவார்

அன்பான சகோதரனே, சகோதரியே, இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!
‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.’ ஏசாயா 48:17

நம் தேவன் நம்மை நடத்துகிறவர். பலவிதமான குடும்ப சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, தனிமையான சூழ்நிலை... இவைகளின் மத்தியிலே நான் எப்படி வாழப் போகிறேன். என்னை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கவலையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா?

கவலைப்படாதீர்கள். இம்மட்டும் உங்களை நடத்தின தேவன் இனிமேலும் நடத்த மாட்டாரா? நிச்சயம் அழகாக நடத்துவார். நம் தேவன் எப்படி நடத்துவார் தெரியுமா? நேர் வழியில் நடத்துவார். ‘... என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்தரித்தேன்.’ ஆதியாகமம் 24:48

ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடுவதற்காக தன்னுடைய ஊழியக்காரனை அனுப்பிய போது ஆண்டவர் அவரை நேர்வழியாய் நடத்தி, ரெபெக்காளை தெரிந்தெடுக்க கிருபை செய்தார். ஆபிரகாமின் மனவிருப்பங்களையும் நிறைவேற்றினார். ஊழியக்காரனுடைய ஜெபத்தையும் கேட்டு ஆச்சரியமாய் காரியங்களை வாய்க்கப் பண்ணினார்.

பிரியமானவர்களே, குறிப்பாக உங்கள் பிள்ளைகளுடைய திருமணக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்கிக்கொண்டிருக்கிறீர்களா? நிச்சயம் உங்களை ஆண்டவர் நேர்வழியாய் நடத்தி ஏற்ற நேரத்தில் ஏற்றத் துணையைக் கொண்டு வந்து உங்களை ஆசீர்வதிப்பார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

நித்தமும் நடத்துவார்

‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்மாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.’ ஏசாயா 58:11

பிரியமானவர்களே, பொருளாதாரப் பிரச்சினையினால் கலங்கி, என் தேவைகளை யார் சந்திப்பார்? எப்படி இந்த தரித்திரம் மாறும்? கடன் பாரம் மறையுமா? என கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.

ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை சந்தித்து, வறட்சி வந்தாலும் உங்களை நடத்தி செழிப்பான நாட்களுக்குள் உங்களைக் கொண்டு வருவார். நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல இருப்பீர்கள். அநேகருக்கு ஆசீர்வாதமாய் தேவன் உங்களை மாற்றுவார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

நித்திய வழியில் நடத்துவார்

‘வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.’ சங்கீதம் 139:24

இந்த உலக வாழ்வு ஒருநாள் முடிந்துபோகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதன்பின் நம் செய்கைக்குத் தக்க நாம் பரலோகத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்ல வேண்டும். பரிசுத்தமாய், தேவனுக்குப் பிரியமாய் வாழ்ந்தால் தான் நம்மை பரலோகத்திற்கு நேராக நித்திய வழியில் நடத்துவார். ஆகவே, அவரையே நோக்கிப் பாருங்கள். அவரே நம்மை முற்று முடிய நடத்த வல்லவராயிருக்கிறார். கலங்காதீர்கள், கர்த்தர் நடத்துவார்.

‘நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’. யோவேல் 2:26

- சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை-54.