மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பழமையான ஊர். இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் அருளும் இறைவன், ‘வீரபாண்டிஸ்வரர்’ என்னும் ‘முகில்வண்ணநாதர்’ என அழைக்கப்படுகிறார்.

Update: 2019-07-18 10:29 GMT
தாயார் சிவகாமி அம்மையார். வீரபாண்டிய என்ற பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்லப் படுகிறது. எப்போதுமே மேக கூட்டங்கள் சுழலும் இடத்தில் தாமிரபரணி கரையில் இவர் அமர்ந்து இருப்பதால், முகில்வண்ணநாதர் என்ற பெயர் வந்தது.

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இந்த ஆலயம் மிக பிரமாண்டமாக இருந்துள்ளது. அதற்கு சாட்சி இக்கோவிலில் உள்ளே உள்ள பிரமாண்டமான விநாயகர், பைரவர், சிவகாமி அம்மாள் ஆகியோரின் சிலைகளாகும். 200 வருடங்களுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே பிற்காலத்தில் இவ்வூரை ஆட்சி செய்தவர்கள், இந்த கோவிலை சிறிதாக கட்டி அதனுள் அனைத்து தெய்வங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்கள்.

தற்போது கோவிலுக்குள் சிவலிங்கம், சிவகாமியம்மாள், பைரவர் உள்பட அனைத்து தெய்வங்களும் ஒரே வளாகத்துக்குள் உள்ளது. இந்த கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நந்தி, தற்போது வெளியே தெரிந்து, அதை ஊரில் மற்றொரு இடத்தில் வைத்து வணங்கி வருகிறார்கள். இதற்கிடையில் இந்த கோவில் வளாகத்தில் உள்ள மற்றொரு சன்னிதியில் மிகப்பிரமாண்டமாக லட்சுமி நரசிம்மர் உள்ளார். தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர், ஒரு சில இடங்களில்தான் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். அந்த வகையில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார்.

நரசிம்ம அவதாரத்தின் போது பெருமாள், மிகுந்த கோபத்துடன் இரணியகசிபுவை வதம் செய்தார். அவனை வதம் செய்த பிறகும் அவரது கோபம் தணியவில்லை. அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்த வண்ணம் இருக்கிறார். இதனைக் கண்ட தேவர்கள் கலங்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அவர் அருகில் செல்ல யாருக்கும் துணிவில்லை. உடனே தேவர்கள் அனைவரும், லட்சுமி தேவியிடம் சென்று, “எப்படியாவது பெருமாளின் கோபம் தணித்து, பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்” என்று கோரிக்கை வைத்தனர்.

லட்சுமி தேவி அங்கு வந்தார். ஆனால் நெருப்பு பொங்கும் கண்களுடன், உக்கிரமாக இருந்த நரசிம்மரைக் கண்டு அவர் பயந்து போனார். அந்த நேரத்தில்தான் சிறுவனான பிரகலாதன், தைரியமாக நரசிம்மரை நோக்கிச் சென்றான். பின் பகவானின் மடியில் அமர்ந்து, அவரது தலையை வருடி விட்டான். நரசிம்மரின் நாக்கு, நீண்ட நெடுங்கையை போல நீண்டு கொண்டிருந்தது. அந்த நாக்கைக் கொண்டு, பிரகலாதனின் முதுகில் தேய்த்து தனது சூட்டை தணித்தார். கோபம் தணிந்து அவர் சாந்தமான நிலைக்கு வந்தார்.

அதன்பிறகே, தேவர்களும், லட்சுமிதேவியும் அவரது அருகில் செல்ல முடிந்தது. நரசிம்மர் லட்சுமிதேவியை தன் மடியில் அமர்த்தி, லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்தார்.

ஒருவர் வெற்றிக் களிப்பில் இருக்கும் போது, அவரிடம் என்ன கேட்டாலும், கேட்டதைத் தரும் மனநிலையில் இருப்பார். அதுபோல, இங்கே இரணியனை வதம்செய்து விட்டு, வெற்றி களிப்பில் தனது மடியில் லட்சுமியை அமர வைத்து மிக சந்தோஷமாக இருக்கிறார், நரசிம்மர். எனவே இங்கு வந்து வணங்கி நின்றால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதால் எதிரிகள் தொல்லை நீங்கும். நீண்ட நாள் பிரச்சினை தீரும்.

சிவன் கோவிலுக்கும், லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கும் இடையே விநாயகர் குடி கொண்டிருக்கிறார். 5 அடி உயரம் கொண்டவர். வெட்டவெளியில் வெயிலில் அமர்ந்து இருக்கிறார். இவருக்கு ‘வெயிலுகந்த விநாயகர்’ என்றும், ‘முக்குருணி அரிசி விநாயகர்’ என்றும் பெயர் உண்டு.

இவ்வூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில், ‘நல்ல பிள்ளை பெற்ற அம்மாள்’ என்ற ‘குணவதி அம்மன்’ அருள்பாலிக்கிறார். கணவனை பிரிந்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி இவர். நல்ல ஆண்பிள்ளை பெற்றெடுக்க காரணமாக இருந்ததினால், இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்த அம்மன்தான் இந்த ஊரின் காவல் தெய்வம். 7 தலைமுறைக்கு முன்பே ஊரில் இருந்து வெளியூர் சென்றவர்களை தேடி கண்டுபிடித்து பிரசன்னம் மூலம் ஊருக்கு கூட்டி வந்த தெய்வம். அந்த வாரிசுகள்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.

எப்போதுமே முகில் வண்ணம் நிறைந்து இருந்த இவ்வூரில், சுமார் 200 வருடங்களுக்கு முன்பு முருக பக்தர் ஒருவருக்கு உணவு வழங்கவில்லை. எனவே அவர் சாபம் இட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே தற்போது இவ்வூரில் ஒரு போகம் கூட விளைவதில்லை. இந்த கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தால்தான் சாபம் தீரும் என பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே அதற்கான முயற்சியில் பக்தர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆலயம் தினமும் நடை திறக்க வாய்ப்பில்லை. அர்ச்சர் வீடு அருகில் இருப்பதால், யாராவது வந்தால் நடை திறந்து பூஜைகள் செய்யப்படுகிறது.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் செய்துங்கநல்லூர் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் சென்றால் முத்தாலங்குறிச்சியை அடையலாம். செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

- முத்தாலங்குறிச்சி காமராசு

மேலும் செய்திகள்