திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்

முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்றது, திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம், ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமை பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது,

Update: 2019-09-20 11:21 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.

தமிழ்கடவுள் முருகப்பெருமானை தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கூறலாம். இந்து மதத்தினர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் ஆறு பிரிவாக பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொருவரை கடவுளாக வரித்துக்கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். இவர்களில் முருகப்பெருமானை கடவுளாக வழிபட்ட அமைப்புக்கு ‘கவுமாரம்’ என்று பெயர். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு திருவேரகம் என்னும் பழனி மலையேறிய பெருமானுக்கு அவரது பக்தர்கள் குன்றுதோறும் கோவில்களை கட்டி வழிபட்டனர். குன்றுகள் இல்லாத இடங்களிலும் கூட முருகப்பெருமானுக்கு சிறப்பு மிக்க பல ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் திருவிடைக்கழி முருகப்பெருமான் கோவில்.

முருகப்பெருமான், தான்செய்த பாவத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, சிவனை வழிபட்டு பேறுபெற்ற தலம் இதுவாகும். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் மற்றும் தில்லையாடிக்கு அருகிலுள்ளது. புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் இருந்து பாதயாத்திரையாக இந்த முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் வழக்கம் கடந்த 38 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தை சரியாக கூறமுடியவில்லை. இத்தலம் முற்காலத்தில் ‘மகிழ்வனம்’ என்றும், ‘குராப்பள்ளி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் வாயிலாக இந்தப் பகுதியில் பல மடங்கள் இருந்த விவரமும், அதன்மூலம் நாள்தோறும் அன்னதானம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதும் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் ‘திருக்குராத்துடையார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

தலவரலாறு

திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.

அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு ‘விடைக்கழி’ என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது. உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

வலதுபுறம் தெய்வானை தனி சன்னிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி. தலவிருட்சம் ‘குராமரம்’ தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சன்னிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.

பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியவற்றை வணங்கி தொழலாம்.

இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்உள்ள இவ்வாலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் மற்றும் முருகனுக்கான ஆலயங்களில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் மிகவும் விமரிசையாக நடத்தப்பெறுகிறது. தில்லையில் பொன்னம்பலக் கூத்தனுக்குத் திருவாதிரை நாளில் களி நிவேதனம் செய்தவரும், திருப்பல்லாண்டு அருளி திருத்தேரினை தில்லை திருவீதிகளில் ஓடவைத்தவருமான சேந்தனார் இத்தலத்தில் திருக்குரா மரத்தின் அடியில் முக்தி பெற்றது ஒரு தைப்பூச நன்னாள். அன்றைய தினம் இவருக்கு அபிஷேக, ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.

தில்லையில் இருந்து திருக்குராவடி

சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான பாதயாத்திரை வழிபாடு இன்று (20-9-2019) வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் தொடங்குகிறது.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்

மேலும் செய்திகள்