குழந்தைப்பேறு வழங்கும் பூளவாடி அன்பிற்பிரியாள்

குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு வழங்கும் கோவிலாகத் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பூளவாடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் இருந்து வருகிறது.

Update: 2019-09-24 10:59 GMT
குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு வழங்கும் கோவிலாகத் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பூளவாடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் இருந்து வருகிறது.

தல வரலாறு

காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு வந்ததுடன், அங்கு வருபவர் களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார்.

அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள்.

ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார்.

அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள்.

அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன் பார்வையில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய சோழ மன்னன் அவள் மேல் காதல் கொண்டான். பின்னர் அவன், அரண்மனை ஆட்களை அனுப்பி மருதவாணனிடம் அவளை மணமுடித்துத் தரும்படி கேட்டான். மருதவாணன் சில நாட்களில் முடிவு செய்து சொல்வதாகச் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

அரசனிடம் முடியாது என்று மறுத்தால், தனக்கும், தனது குடும்பத்துக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்பதை நினைத்துக் கவலை யடைந்த மருதவாணன், தன்னையும், தனது குடும்பத்தையும் காத்தருளும்படி அங்கிருந்த சிவபெருமான் கோவிலுக்குச் சென்று வேண்டினார்.

இந்தநிலையில், தொண்டை நாட்டைச் சேர்ந்த வணிகன் தாவளன் என்பவன் அவரிடம் வந்து, அவரது பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்டார். மருதவாணனும், தனது பெண்ணைத் தம் குலத்தைச் சேர்ந்த வருக்கே மணமுடித்துத் தருவதென்று முடிவு செய்து, அவருக்கே மணமுடித்துத் தருவதாகச் சொல்லி உறுதிப்படுத்தும் நிகழ்வை நடத்தி முடித்து அனுப்பி வைத்தார்.

பல நாட்கள் கடந்தும், மருதவாணனிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், சோழ மன்னன், மருதவாணனின் உறவினரான சோழப்பாண்டி என்பவரை அழைத்து, மருதவாணன் மகளைத் திருமணம் செய்து கொள்ள உதவும்படி வேண்டினான். சோழப்பாண்டியோ மருதவாணனின் மகளைத் தொண்டை நாட்டு வணிகர் தாவளன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கான உறுதிப்படுத்தல் நிகழ்வு நடந்து முடிந்து விட்டதால், தன்னால் ஒன்று செய்ய இயலாது என்று மறுத்துவிட்டார்.

சோழ மன்னன், வணிகரான மருதவாணன் மகளைப் பலவந்தமாகக் கடத்தி வந்து திருமணம் செய்து கொள்வதென்று முடிவு செய்தான். அதனை அறிந்த மருதவாணன், தனது மகள் அரசனுக்குப் பொருத்தமானவள் அல்ல என்பதைத் தெரிவிக்கும் வகையில், வீட்டில் ஒரு கருப்பு பெண் நாயைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து வெளியேறினார்.

அவர்கள் செல்லும் வழியில், தொண்டை நாட்டு வணிகரான தாவளன் எதிரில் வந்தார். அவரைக் கண்ட மருதவாணன், அரசன் ஆட்கள் வருவதற்கு முன்பாகத் தனது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். தாவளனும் மருதவாணன் மகளுக்கு மாலை அணிவித்துத் திருமணம் செய்து கொண்டார். அப்போது மருதவாணன் அங்கிருந்தவர்களிடம், அரசனின் ஆட்கள் வருவதற்குள் வேறு இடத்திற்குச் சென்று விடுவோம் என்று சொல்ல, அங்கிருந்தவர்கள் அனைவரும் வேகமாகச் செல்லத் தொடங்கினர்.

அவர்கள் சென்ற வழியில், இடையேக் காவிரி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி ஆற்றைக் கடந்தனர். அக் கரைக்கு சென்று பார்த்த போது, அவர்களுடன் வந்த மணமகன் தாவளனையும், மணப்பெண்ணையும் காணாமல் தவித்தனர். தன் மகளின்றி தன்னால் உயிர் வாழ முடியாது என்று சொல்லிய படியே மருதவாணன் ஆற்றில் இறங்கி உயிரை விடத் துணிந்தார்.

அப்போது, “மருதவாணரே அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அருகிலுள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு உன் மகளையும், மருமகனையும் காணலாம்” என்று ஒரு குரல் வானிலிருந்து கேட்டது. அதனைக் கேட்ட அனைவரும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்றனர்.

அங்கு ஒரு மருத மரத்தடியில், மருதவாணன் மகளும், தாவளனும் இருந்தனர். அவர்களைக் கண்டதும் மனம் மகிழ்ந்த மருதவாணன், வரும் வழியில் மாலை மாற்றித் திரு மணம் செய்து கொண்டதால்தான் இருவரும் ஆற்றில் இறங்கிய போது, காணாமல் போய்விட்டீர்கள். இக்கோவிலில் திருமணம் செய்து கொண்டால், இனி அது போன்ற தவறுகள் நடக்காது என்று சொல்லி கோவிலில் திரு மணத்தை நடத்தி வைத்தார். அப்போதுதான், தன் மகளாகப் பிறந்தவர் பார்வதி தேவி என்பதும், மரு மகன் தாவளனாக வந்தவர் இறைவன் சிவபெருமான் என்பதும் அவருக்குத் தெரிந்தது. அதனையறிந்த அவரும் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சிஅடைந்தனர்.

இதற்கிடையே, மருத வாணன் வீட்டிற்குச் சென்ற சோழ மன்னன் கருப்புப் பெண் நாய் கட்டப்பட்டிருந்ததைக் கண்டு பெரும் கோபமடைந்தான். அங்கிருந்த வணிகர்கள் அனைவரையும் துன்புறுத்தும்படி ஆணையிட்டான். அவனுடைய துன்புறுத்தலைத் தாங்க முடியாத பலர் அங்கிருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றனர்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்டன. பிற்காலத்தில் அந்தச் சோழ மன்னன் மரபு வழியில் வந்தவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். அவர்கள், தங்கள் முன்னோர் ஒருவர் வணிகர் களுக்குச் செய்த கொடுமைகளும், துன்பங் களுமே தற்போதையத் துன்பத்துக்குக் காரணமென்பதைக் கண்டறிந்தனர். உடனே அவர்கள் வணிகர்களை அழைத்துப் பேசினர்.

தன் முன்னோர் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்ட புதிய மன்னன், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் விழாவை ஆண்டுதோறும் தானே முன்னின்று நடத்துவதாகத் தெரிவித்தான். அதற்கு மறுப்பு தெரிவித்த வணிகர்கள், இறைவன், இறைவி திருமண விழாவினைத் தாங்களே நடத்துவோம் என்றனர். இரு பிரிவினருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின்னர் இரு பிரிவினரும் சமாதானமடைந்து, இத்திருமண விழாவினை யார் நடத்துவது என்பதை நாளை கோவிலில் வைத்து முடிவு செய்யலாமென்று கூறிச் சென்றனர். மறுநாள், மன்னர் குடும்பத்தினரும், வணிகர்களும் கோவிலுக்கு வந்தனர். மன்னர் குடும்பத்தினர், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்து வைக்கும் விழாவினைத் தாங்கள் நடத்திட அருள் புரிந்திட வேண்டுமென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வேண்டினர். அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு வணிகர்கள், “எங்கள் வணிகக் குலத்தில் பிறந்து, எங்கள் அன்புக்குரியவளாக இருந்த இறைவியே, உன்மேல் கொண்ட எங்கள் அன்பு பிரியாமல் இருக்க உன் திருமணத்தை நடத்தும் உரிமையை எங்களுக்கே அளிக்க வேண்டும்” என்று சொல்லி வேண்டியபடி, “அன்புப்பிரியாள் அம்மா” என்று பாசத்துடன் மூன்று முறை அழைத்தனர்.

அப்போது, இறைவியிடம் இருந்து “ஏன் அப்பா, ஏன் அப்பா, ஏன் அப்பா” என்று மூன்று முறை பதில் வந்தது. அதனைக் கண்ட மன்னனும், இக்கோவிலில் வைகாசி மாதம் நடத்தப்பெறும் திருமண விழாவினை இனி வணிகர்களே நடத்தலாம் என்று உரிமையளித்தான்.

பிற்காலத்தில் அங்கிருந்து இடம் பெயர்ந்த வணிகர்கள் சிலர், தாங்கள் வசித்து வந்த பூளவாடி எனுமிடத்தில் அன்புப்பிரியாள் அம்மனுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்ட முடிவு செய்து கோவிலை நிறுவினர் என்று இந்த ஆலயம் அமையப்பெற்ற வரலாற்றைச் சொல்கிறார்கள்.

கோவில் அமைப்பு

சிவபெருமானின் அன்பில் பிரியாது இருக்கும் பார்வதிதேவி, தன் பக்தர்களிடமும் அன்பு கொண்டு அவர்கள் வேண்டியதை வழங்குவாள் எனும் கருத்தில், இக்கோவிலின் இறைவி, ‘அன்பிற்பிரியாள்’ என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் கருவறையில், கிழக்கு திசையைப் பார்த்தபடி, வலது காலை மடக்கியும், இடது காலைக் கீழே வைத்தும் அமர்ந்த நிலையில் அன்பிற்பிரியாள் இருக்கிறார். இங்கிருக்கும் இறைவன் ‘காசி விசுவநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை ‘மருதாவாணேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. இதே போல் தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி வாழ்வில் வளமடைய வேண்டியும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் பூளவாடி உள்ளது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தாராபுரம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தேனி மு.சுப்பிரமணி

மேலும் செய்திகள்