சித்தர்களுக்கு அருள்புரிந்த ஊட்டி சிவன்

உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம், நர்மதைக் கரையில் கிடைத்த பாணலிங்கம் கொண்ட ஆலயம், யோக தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கும் திருத்தலம், ஆறு சித்தர்களின் நினைவாலயம் கொண்ட கோவில், காந்தியடிகள் வியந்து போற்றிய மடம் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி காந்தள் காசி விசுவநாதர் திருக்கோவில்.

Update: 2020-02-25 12:17 GMT
காசி விசுவநாதர் - விசாலாட்சி அம்மன்
உலகம் போற்றும் நாயகனான சிவபெருமான், ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுப் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அந்த வகையில் கொங்குநாட்டின் சிவ வடிவமாக விளங்குவது வெள்ளியங்கிரி மலை. அதேபோல சக்தி வடிவமாகத் திகழ்வது, நீலகிரி மலையாகும். சக்தி வடிவான நீலகிரியின் உதகமண்டலத்தில் உள்ள திருக்காந்தளில், அருள் வழங்கும் விதமாகத் திகழ்கிறது காசி விசுவநாதர் ஆலயம்.

தல வரலாறு

சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் ஸ்ரீ ஏகாம்பர சுவாமிகள் நீலகிரியின் மலை பிரதேசத்தில் தவம் இயற்றினார். ஒரு கட்டத்தில் இவருக்கு, அடியார் வடிவில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த சிவபெருமான், புலித்தோல் ஆசனமும், பாதக்குறடும் வழங்கி அருள்பாலித்தார். அதன்பின் கோவையில் உள்ள பழமையான பேரூர் மடம் சென்று, தவத்திரு ராமலிங்க அடிகளாரைச் சந்தித்து, துறவு மேற்கொண்டார், ஏகாம்பர சுவாமிகள்.



இவருக்குப் பிறகு வந்த நிரஞ்சனப் பிரகாச சுவாமிகளுக்கு, காசி விசுவநாதர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ராயபோயர் என்ற சிவனடியாரும், அவர்தம் மனைவியான கற்பகத்தம்மையாரும் இந்தப் பணியில் இணைந்தனர். மஞ்சம்மாள் என்பவர் தலைமையில், அடியார்கள் ஆதரவில் ஆலயப் பணிகள் தொடர்ந்தன. கி.பி. 1913-ல் யோகீந்தர் ஓம்பிரகாச அடிகளார் தலைமையில் பாலதண்டாயுதபாணி சிலை நிறுவப்பட்டது. இம்மடத்தின் பெருமை அறிந்து பயனடைந்த, ஜெய்ப்பூர் அரசி ராஜராஜேசுவரி, 1932-ல் அருளுரை மண்டபம் அமைத்துத் தந்தார். இதன்பின் 1935-ல் யோக தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டது.

இவ்வாலயத்திற்கான சிவலிங்கத்தினை நர்மதை நதியில் இருந்து நான்முகன், திருமால், தேவர்கள் ஆகியோர் வழிபட்ட பூணூல் ரேகை தாங்கிய பாணலிங்கம், 1958-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டது. இதன்பின் சில அடியார்களின் ஆதரவோடு திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு விழா நடந்தேறியது. ஆலய வளாகத்தில் சித்தர்கள் நினைவாலயம், காசி விசுவநாதர் திருக்கோவில் என இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன.

ஆலய அமைப்பு

ஆலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும். கொடிமரத்தில் கலைநயம் மிக்க நந்திகள், பலிபீடம், நந்திதேவர் ஒருங்கே அமைந்துள்ளன. மகாமண்டபம் தாண்டியதும், கரு வறையில் நர்மதை நதியில் கிடைத்த பாணலிங்கம் நம்மை வரவேற்கிறது. இறைவன் கிழக்கு முகமாகப் புதுப்பொலிவோடு காட்சி அருளுகிறார். சன்னிதியில் தெற்கு நோக்கிய அன்னை விசாலாட்சி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.

இதுதவிர வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், ஸ்ரீதேவி -பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, கங்கை அம்மன், சனி பகவான், காலபைரவர், நவக்கிரகங்கள், பாண்டுரங்கன், தத்தாத்ரேயர், கனகசபை, ஓங்காரம் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. கருவறை சுற்றில் லிங்கோற்பவர், பிரம்மா, சண்டிகேசுவரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இந்த வளாகத்தின் மறு பகுதியில் சித்தர்கள் நினைவாலயம், ஆறு சித்தர்களின் சமாதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

யோக தட்சிணாமூர்த்தி

இத்தலத்து யோக தட்சிணாமூர்த்தி, சின் முத்திரையோடு காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். ஞானம்பெற விரும்புவோருக்கு ஏற்ற தெய்வமாக இவர் விளங்குகிறார். இந்த ஆலயத்தில் விநாயகர் வழிபாடு, கிருத்திகை, பிரதோஷம், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. என்றாலும், மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதுபோல, சித்தர்களின் குருபூஜைகளும் இங்கே சிறப்பாக நடத்தப்படுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள போட் அவுஸ் எனப்படும் படகுக் குழாம் இடத்திற்கு மிக அருகில் உள்ளது காந்தள் என்ற பகுதி. இங்குதான் இந்த ஆலயம் இருக்கிறது.



சித்தர்கள் நினைவாலயம்

இங்குள்ள ஆலயம் எழும்புவதற்கு முன்பாக உருவான, தட்சிணாமூர்த்தி திருமடாலயத்தைத் தோற்றுவித்தவர் ஏகாம்பரதேசிக சுவாமிகள், இவருக்குப் பின் வந்த சித்தீசுவரர் ரத்தின அம்மணி அம்மையார், யோகீந்தர் ஓம் பிரகாச சுவாமிகள், நிரஞ்சன் பிரகாச சுவாமிகள், மஞ்சம்மாள், சுப்பிரமணிய சுவாமிகள் என ஆறு சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்த மண்டபமே சித்தர்கள் நினைவாலயமாக போற்றப்படுகிறது. இதுதவிர, பாலதண்டாயுதபாணி சுவாமிகளுக்கும் இங்கு குருபூஜை நடத்தப்படுகிறது.

பாணலிங்கம்

பாணாசுரன் எனும் அரக்கன் நதிக்கரையில் வழிபாடு செய்த, பூணூல் ரேகை கொண்ட லிங்கமே ‘பாணலிங்கம்’ எனப்படுகிறது. ஆயிரம் கல் லிங்கத்திற்கு இணையானது ஒரு ஸ்படிக லிங்கம். பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு இணையானது, ஒரு பாணலிங்கம் என ஆன்றோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நர்மதை நதியில் கிடைத்த இந்த பாணலிங்கம் அபூர்வ சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது. இத்தல இறைவனை வழிபட்டால் அனைத்து நன்மைகள் தேடி வந்து சேரும்.

- பனையபுரம் அதியமான்

மேலும் செய்திகள்