சிறந்த பக்தியால் சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரர்

சோழவள நாட்டில் வசித்து வந்த எச்சதத்தன்- பவித்திரை தம்பதியரின் மகனாகப் பிறந்தவர், விசாரசருமன். இவர் சிறுவயது முதலே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.

Update: 2021-01-30 22:30 GMT
இவர் பிற்காலத்தில் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வரும் பணியைச் செய்து வந்தார். மாடுகள் அனைத்தும் மேய்ச்சலில் இருக்கும்போது, மணலில் சிவலிங்கம் செய்வார், விசாரசருமன். அதோடு அந்த லிங்கத்திற்கு, பசுக்களில் இருந்து பாலை கரந்து அபிஷேகமும் செய்வார். அவ்வாறு சிவலிங்க பூஜைக்கு பால் கரக்கும் பசுக்கள், வீட்டிற்கு வந்தும் தங்களது பாலை அதே அளவில் கொடுத்து வந்தன.

ஒரு முறை ஊரில் உள்ள ஒருவர், விசாரசருமன் பசுக்களின் பாலைக் கரந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்து விட்டு, எச்சதத்தனிடம் கூறினார். இதையடுத்து உண்மையை அறியும் நோக்கில், மறுநாள் மாடுகள் மேய்ச்சலுக்கு நிற்கும் இடத்திற்கு வந்தார், எச்சதத்தன். ஊர்க்காரர் சொன்னது போலவே, மணலில் சிவலிங்கம் அமைத்த விசாரசருமன், அதற்கு பசுக்களின் பாலைக் கரந்து அபிஷேகம் செய்தார். இதைக்கண்டு கோபம் அடைந்த எச்சதத்தன், தன்னுடைய மகனை ஒரு குச்சியால் அடித்து உதைத்தார். மேலும் ஆத்திரம் தீராதவராய், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தார்.

இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், தந்தையின் கையில் இருந்த குச்சியை பறித்து, அவரது கால்களை நோக்கி வீசினார். அது கோடரியாக மாறி, எச்சதத்தனின் காலை காயப்படுத்தியது. ஈசனின் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக தந்தையையே தாக்கத் துணிந்த அந்த பக்தனின் முன்பாக, பார்வதி சமேதராக பரமசிவன் தோன்றினார். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்த இறைவன், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்தியம் போன்றவை, சண்டிகேஸ்வரருக்கு கிடைக்கும் என்றும் அருள்பாலித்தார். சிவ பக்தியால் செய்வதற்கரிய செயல்களைச் செய்த நாயனார்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்தார்.

சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை. சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவருடைய தியானத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியாக வழிபாடு செய்ய வேண்டும்.

இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி, இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்.

யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமி ஆகும். புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கு வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.

மேலும் செய்திகள்