ஈசனுக்கு துளசி அர்ச்சனை

திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.

Update: 2021-02-03 12:05 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனை, தன்னுடைய குறைகளை போக்க வேண்டும் என்று இறைவி, துளசி இலைகளால் வழிபட்டதாக சொல்லப்படுகிறது. எனவே திங்கட்கிழமை தோறும் இத்தல ஈசனுக்கு, துளசி இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.

பாதரச சிவலிங்கம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்கு மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும். பாதரசத்தை சுத்தப்படுத்தி கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். அது பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சித்தரால் வடிவமைக்கப்பட்டது, இந்த சிவலிங்கம் என்று சொல்கிறார்கள். சித்த மார்க்கத்தில் செல்பவர்கள், இந்த ஆசிரமத்திற்குச் சென்று பாதரச லிங்கத்தை தரிசிக்கலாம். இதன் அருகாமையே நமக்கு பல நல்ல பலன்களைத் தருமாம்.

உருகாத நெய்

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘வடக்குநாதர்’ என்பதாகும். இங்குள் மூலவருக்கு பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. பல வருடங்களாக நெய் அபிஷேகம் செய்து வந்ததன் காரணமாக, நெய் உறைந்து சிவலிங்கத்தையே மறைத்து விட்டது. அப்படி உறைந்த நெய்யின் உயரமே சுமார் 4 அடி இருக்கும் என்கிறார்கள். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்திருந்தாலும், வெயில் காலத்தில் வெப்பம் தகித்த போதிலும், உறைந்த நெய்யானது உருகுவதில்லையாம். இன்னும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அபிஷேக நெய் பிரசாதத்தை வாங்கி உண்டால், தீராத நோய்களும் தீரும் என்கிறார்கள்.

மேலும் செய்திகள்