அதிசய ஆலயங்கள்

வேலூர் மாவட்டம் வன்னிவேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில், வீடு கட்டுவதில் ஏதாவது தடை இருந்தால், அங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாக கோர்த்து அணிவிக்கிறார்கள்.

Update: 2021-03-03 10:27 GMT
* தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற இடத்தில் ஏகவுரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னை மாங்கல்யம் காப்பதில் சிறப்புமிக்கவள். தங்கள் கணவனுக்காக வேண்டிக்கொண்டு, அதில் பலன்பெற்ற பெண்கள், இந்த அம்மனுக்கு எருமை கன்றை தானமாக வழங்கும் வழக்கம் உள்ளதாம்.

மேலும் குழந்தைப்பேறில் தடை உள்ள பெண்கள், இந்த அம்மன் சன்னிதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை வாங்கி பருகினால், அம்மனின் அருளால், அவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கிறதாம்.

* காஞ்சிபுரம் அருகே கூரம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இது கூரத்தாழ்வார் என்னும் மகான் வாழ்ந்த புண்ணிய ஊர் ஆகும். இவர் தன்னுடைய குரு ராமானுஜரின் உயிரைக் காப்பதற்காக, தன்னுடைய கண்களை இழந்தவர்.

* கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி. இங்குள்ள தலத்தில் தன்னுடைய கண்பார்வையை பெற்றார், சுக்ரன். அவருக்கு கண்ணொளி தந்த தீபம், இன்றளவும் ‘நேத்ர தீபம்’ என தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டிக்கொண்டால் கண் உபாதைகள் விலகுகின்றன.

* சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருஞானசம்பந்தருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்த தலம். அம்பாள், சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து ஞானத்தை ஊட்டிய தலம். இந்த ஆலயத்தின் மூன்று மூலவர்கள் உள்ளனர். பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீஸ்வரர் -லிங்க வடிவம், ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்த தோணியப்பர்- குரு வடிவம், சட்டநாதர்- சங்கம வடிவம்.

மேலும் செய்திகள்