ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2024-01-02 00:06 IST

திருச்செந்தூர்,

ஆங்கில புத்தாண்டு பிறப்பை நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி அதிகாலை முதலே கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவில் ராக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

கூட்டம் அலைமோதியது

ஆண்டின் முதல் நாளில் சாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் ஆகியவற்றில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்