பாவங்களை போக்கும் திருமயம் சத்தியகிரீஸ்வரர்

சத்தியகிரீஸ்வரரை மனதார நினைத்தால் அவர்களது பாவங்கள் நீங்கும். தொழிலில் வெற்றி, திருமண தடை நீங்கும்.;

Update:2022-08-04 18:04 IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேதுபதி விஜயரகுநாத தேவர் எனும் கிழவன் சேதுபதி மன்னரால் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்டையில் மலையை குடைந்து குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், விஷ்ணு சன்னிதிகள் ஒரே இடத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் இரு சன்னிதிகளுக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டு, விஷ்ணு சன்னிதி சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலாகவும், சிவன் சன்னிதி சத்தியகிரீஸ்வரர் கோவிலாகவும் மாற்றப்பட்டது.

 

இதில் சத்தியகிரீஸ்வரர் கோவிலில், மூலவர் லிங்கமாக காட்சியளிக்கிறார். குடைவரை கோவிலான இதில் சிற்பங்கள் மிக அழகாக உள்ளன. துவாரபாலகர் சிற்பம் அழகுமிக்கவை. மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது அவை முழுமையாக அழிந்துவிட்டன. கோவிலில் முதல் மண்டபத்தில் உமாபதீஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி அம்மன், பைரவர், நவக்கிரகங்கள் சன்னிதிகள் உள்ளன.

கோவிலில் வேணுவனேஸ்வரி அம்மன் சன்னிதி உள்ளது. 'வேணுவனேஸ்வரி' என்பதற்கு 'மூங்கில் காட்டு அரசி' என பொருள்படும். ஒரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் காடு அதிகம் இருந்ததால், இயற்கை சூழலையொட்டி அம்மனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கோவில் கி.பி. 8-9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து குகைக்கோவிலாகும். திருமயம் கோட்டைக்கு சுற்றுலா வருபவர்கள் சிவன், விஷ்ணு சன்னிதியில் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும் ஆன்மிக சுற்றுலா வருபவர்களின் பயணத்தில் இக்கோவிலும் இடம் பெறுகிறது.

சத்தியகிரீஸ்வரரை மனதார நினைத்தால் அவர்களது பாவங்கள் நீங்கும். தொழிலில் வெற்றி, திருமண தடை நீங்கும். குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்