கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தலையெடுத்த கொரோனா, உலகம் முழுவதிலும் பரவி, இந்தியாவிலும் காலெடுத்து வைத்தது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் 7-ந்தேதிதான் முதலில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-02 00:24 GMT
ஆரம்பத்தில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்ணிக்கையில் உயர்ந்த கொரோனா, ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கணக்கில் உயரத் தொடங்கியது. இப்போது ஆயிரத்தில் அதிகரிக்கத்தொடங்கி, மொத்த பாதிப்பு 23 ஆயிரத்தையும் தாண்டி வெகுவேகமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், கடந்த வாரம் முதல்-அமைச்சரை சந்தித்த மருத்துவ நிபுணர் குழு, “பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் இந்த மாத இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை அடைந்துவிடும்” என்ற எச்சரிக்கை மணியை பலமாக ஒலித்துவிட்டு சென்றுவிட்டது.

கொரோனா தாக்குதலுக்கு மிக அதிகமானவர்கள் சென்னையில்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளிலும், 1,200 குடிசைப்பகுதிகளிலும், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை இருக்கிறது.

எதையுமே வெளிப்படையாக தெரிவித்துவிடும், சென்னையில் கொரோனா தடுப்புக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பே பாதிப்பு தினமும் ஆயிரத்தை தாண்டிவிடும் என்று கூறியது மட்டுமல்லாமல், இந்த வாரமும் சோதனைகளை அதிகப்படுத்துவதன் காரணமாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலில் கொரோனா நுழைந்தபோது, ஒரு கொரோனா பரிசோதனை கூடம் கூட கிடையாது. புனேயில் உள்ள தேசிய தொற்று கிருமி ஆராய்ச்சி நிறுவனத்துக்குத்தான் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. முதலில், கிண்டி கிங்ஸ் நிறுவனத்திலும், அடுத்து திருவாரூர், தேனியில் பரிசோதனை கூடங்களும் தொடங்கப்பட்டன.

தொடர்ந்து சுகாதாரத்துறை எடுத்த முயற்சியால், தற்போது 43 அரசு மருத்துவ பரிசோதனை கூடங்களும், 29 தனியார் மருத்துவமனைகளில் உள்ள சோதனை கூடங்களும் இயங்குகின்றன. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் 72 கொரோனா பரிசோதனை கூடங்கள் இருக்கின்றன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசு சோதனை கூடங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கிண்டி கிங்ஸ் நிறுவனத்திலும், பொது சுகாதாரத்துறை பரிசோதனை கூடத்திலும் தினமும் தலா 1,500 கொரோனா பரிசோதனைகளை நடத்த முடியும். அரசு மருத்துவ பரிசோதனை கூடங்களில் தான் 80 சதவீத பரிசோதனைகள் நடக்கின்றன.

இந்தநிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4,500 வசூலித்துக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கட்டணமாக நிர்ணயித்து இருந்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை நிலையங்கள் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசிக்கும் வகையில் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். அப்போது, அவர்களிடம் அவர் விடுத்த வேண்டுகோளின்படி, இப்போது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வருபவர்களிடம், இந்த கட்டணத்தில் இருந்து ரூ.2,500 கழித்துக்கொள்ளப்படும். இதேபோல, மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை எடுத்த இந்த முயற்சி நிச்சயமாக பாராட்டுக்குரியது. இப்போது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நேரத்தில், மேலும் பரிசோதனை கூடங்களை அரசு தரப்பிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.

இதேபோல, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டுகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தையும், பரிசோதனை கட்டணத்தை குறைத்ததுபோல, குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஏழை, நடுத்தர மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்