இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவா? மேத்யூஸ் பேட்டி

தேர்வு குழுவினருடன் ஆலோசித்த பிறகே கேப்டன் பதவி குறித்து எந்த முடிவுக்கும் வருவேன் என மேத்யூஸ் கூறினார்.;

Update:2017-07-12 03:00 IST

ஜூலை

சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது. தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஜிம்பாப்வேயிடம் முதல் முறையாக தொடரை பறிகொடுத்ததால் இலங்கை கேப்டன் 30 வயதான மேத்யூஸ் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று. இதை என்னால் ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறது. டாசில் இருந்து ஆடுகளத்தை சரியாக கணிக்க தவறியது வரை எல்லாமே எங்களுக்கு எதிராக அமைந்தது. அதற்காக தோல்விக்கு சாக்குபோக்கு சொல்ல விரும்பவில்லை. அவர்களை தோற்கடிக்க கூடிய அளவுக்கு எங்களது திறமை வெளியாகவில்லை என்பதே உண்மை. கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை. அதற்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது. தேர்வு குழுவினருடன் ஆலோசித்த பிறகே கேப்டன் பதவி குறித்து எந்த முடிவுக்கும் வருவேன்.

இவ்வாறு மேத்யூஸ் கூறினார்.

மேலும் செய்திகள்