பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் உலக லெவன் அணி தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி தோல்வி அடைந்தது.

Update: 2017-09-12 21:30 GMT

லாகூர்,

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானில் கிரிக்கெட்

பாதுகாப்பு அச்சம் காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை கொண்டு வரும் நோக்குடன் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 7 நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக லெவன் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்த போட்டிக்கு ஐ.சி.சி. சர்வதேச அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச போட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லாகூரில் நேற்றிரவு அரங்கேறியது. ‘டாஸ்’ ஜெயித்த உலக லெவன் அணி பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது.

197 ரன்கள் குவிப்பு

இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 86 ரன்கள் (52 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அகமது ஷேசாத் (39 ரன்), சோயிப் மாலிக் (38 ரன்), இமாத்வாசிம் (2 சிக்சருடன் 15 ரன்) ஆகியோரும் சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவிகரமாக இருந்தனர்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய உலக லெவன் அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடவில்லை. அதிகபட்சமாக கேப்டன் பிளிஸ்சிஸ், டேரன் சேமி தலா 29 ரன்கள் எடுத்தனர்.

உலக அணி தோல்வி

20 ஓவர்களில் உலக லெவன் அணியால் 7 விக்கெட்டுக்கு 177 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சோகைல் கான், ருமான் சயீஸ், ‌ஷதப் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்த 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

மேலும் செய்திகள்