2–வது 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது உலக லெவன்

பரபரப்பான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி கடைசி ஓவரில் பாகிஸ்தானை பதம் பார்த்தது.

Update: 2017-09-14 00:00 GMT
லாகூர், 

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இது, பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டை கொண்டு வருவதற்குரிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக வர்ணிக்கப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது 20–வது ஓவர் சர்வதேச போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது. உலக லெவன் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த பால் காலிங்வுட் இடம் பெற்றார். 2011–ம் ஆண்டு ஓய்வு பெற்ற 41 வயதான காலிங்வுட் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார்.

மாலிக் சாதனை

டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 45 ரன்களும், அகமது ஷேசாத் 43 ரன்களும், முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் 39 ரன்களும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். 

இதில் சோயிப் மாலிக், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை நேற்று பெற்றார். 1,690 ரன்களுடன் இதுவரை அந்த சாதனையை தக்க வைத்திருந்த உமர் அக்மலை முந்திய மாலிக் 88 ஆட்டங்களில் 1,702 ரன்கள் சேர்த்துள்ளார்.

உலக அணி வெற்றி

அடுத்து களம் இறங்கிய உலக லெவன் அணியில் தமிம் இக்பால் (23 ரன்), டிம் பெய்ன் (10 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (20 ரன்) குறிப்பிட்ட இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு திசரா பெரேரா ஒத்துழைப்பு கொடுக்க உலக லெவன் அணி நெருக்கடியில் இருந்து மீண்டது. பெரேரா அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார்.

கடைசி ஓவரில் உலக அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 20–வது ஓவரை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ருமான் ரயீஸ் வீசினார். அவர் முதல் 4 பந்தில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5–வது பந்தை எதிர்கொண்ட திசரா பெரேரா அதை சிக்சருக்கு விரட்டி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலக லெவன் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது. அம்லா 72 ரன்களுடனும் (55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), திசரா பெரேரா 47 ரன்களுடனும் (19 பந்து, 5 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இவ்விரு அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்