ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்ப்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது.

Update: 2017-12-26 07:36 GMT
மெல்போர்ன்,

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரும் பன்கிரப்டும் களம் இறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், சதம் அடித்து அசத்தினார். 151 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பன்கிராப்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜா  17 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து அபாரமாக ஆடி வரும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இன்றைய போட்டியிலும் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி  89 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 65 ரன்களுடனும் ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து  அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராடு, வோக்ஸ், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே, 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்