போட்டி தொடர்ந்து நடக்குமா?ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் அபாயகரமானது முன்னாள் வீரர்கள் புகார்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஆடுகளத்தில் பந்து நேற்று சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. #cricket #TNnews

Update: 2018-01-26 21:30 GMT
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஆடுகளத்தில் பந்து நேற்று சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. அதாவது களத்தில் பந்து சில இடங்களில் விழுந்து எழும்பிய போது, வீரர்களின் உடலை பதம்பார்த்தன. கோலி, விஜய்க்கு பந்து கையில் தாக்கி வலியால் அவதிப்பட்டனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஷாட்பிட்ச் பந்து, தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரின் ஹெல்மெட்டை வேகமாக தாக்கியது. இதனால் முன்கூட்டியே ஆட்டத்தை நிறுத்த வேண்டியதாகி விட்டது.

இந்த டெஸ்ட் தொடர்ந்து நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆடுகளத்தன்மை வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணப்படுவதால் இங்கு தொடர்ந்து விளையாடலாமா? என்பது குறித்து போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் கள நடுவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நடுவரின் முடிவு இன்று தெரிய வரும். ஆனால் ஆடுகளம் குறித்து இந்திய தரப்பில் எந்த வித புகாரும் அளிக்கப்படவில்லை.

டெலிவிஷன் வர்ணனையாளரும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மைக்கேல் ஹோல்டிங் கூறும் போது, ‘என்னை கேட்டால் இந்த ஆடுகளத்திற்கு 100-க்கு 2 மதிப்பெண் மட்டுமே கொடுப்பேன். இதுவெல்லாம் ஒரு ஆடுகளமா? விஜயை பந்து தாக்கிய போதே இந்த போட்டியை நிறுத்தியிருக்க வேண்டும் இது கிரிக்கெட் விளையாடுவதற்குரிய உகந்த ஆடுகளமே அல்ல. ஒரு அபாயகரமான ஆடுகளம். ஆடுகளத்தன்மை ஏன் இப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை’ என்றார்.

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு இது நல்ல ஆடுகளம் அல்ல. இதை ஐ.சி.சி. கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கல்லினன் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்ததில் மோசமான ஆடுகளம் இது தான்’ என்றார்.

மேலும் செய்திகள்