இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வங்காளதேச அணி 513 ரன்கள் குவித்து ‘ஆல்–அவுட்’

இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது

Update: 2018-02-01 20:30 GMT

சிட்டகாங்,

இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 175 ரன்னுடனும், கேப்டன் மக்முதுல்லா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சில் 129.5 ஓவர்களில் 513 ரன்கள் குவித்து ‘ஆல்–அவுட்’ ஆனது. மொமினுல் ஹக் 176 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மக்முதுல்லா 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லக்மல், ஹெராத் தலா 3 விக்கெட்டும், சன்டகன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து தனஞ்செயா டி சில்வா, குசல் சில்வாவுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 48 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. குசல் மென்டிஸ் 152 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 83 ரன்னும், 4–வது சதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 127 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 104 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர். இன்று 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்