ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 4-வது முறையாக ‘சாம்பியன்’ 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்து வரலாறு படைத்தது.

Update: 2018-02-03 22:00 GMT
மவுன்ட் மாங்கானு,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்து வரலாறு படைத்தது.

இறுதிப்போட்டி

12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் மவுன்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜாசன் சங்ஹா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட மேக்ஸ் பிர்யன்ட் 14 ரன்னிலும், ஜாக் எட்வர்ட்ஸ் 28 ரன்னிலும் வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரெலின் பந்து வீச்சுக்கு இரையானார்கள். கேப்டன் ஜாசன் சங்ஹா 13 ரன்னில் இருக்கையில் கம்லேஷ் நாகர்கோட்டியின் பந்து வீச்சில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆஸ்திரேலியா 216 ரன்


பின்னர் 4-வது விக்கெட்டுக்கு பாரம் உபல், ஜோனதன் மெர்லோ இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவுக்கு மீட்டனர். ஸ்கோர் 134 ரன்னாக உயர்ந்த போது பாரம் உபல் (34 ரன்கள்) அனுகுல் ராயின் சுழலில் அவரிடமே சிக்கினார். அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் துரிதமாக சரிந்தன. பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இந்திய வீரர்களின் பிடி இறுகியதால் ஆஸ்திரேலியாவால் அதிரடி காட்ட முடியவில்லை. தாக்குப்பிடித்து ஆடிய ஜோனதன் மெர்லோ தனது பங்குக்கு 76 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷான் போரெல், கம்லேஷ் நாகர்கோட்டி, சுழற்பந்து வீச்சாளர்கள் ஷிவா சிங், அனுகுல்ராய் தலா 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

மன்ஜோத் கல்ரா சதம்

பின்னர் 217 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா களம் புகுந்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் இருவரும் வலுவான அஸ்திவாரம் உருவாக்கி தந்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் திரட்டினர். கேப்டன் பிரித்வி ஷா 29 ரன்களில் (41 பந்து, 4 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார்.

அடுத்து வந்த சுப்மான் கில் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் அரைசதம் அடித்திருந்த அவர் இந்த ஆட்டத்தில் 31 ரன்களில் (30 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய், மன்ஜோத் கல்ராவுடன் கைகோர்த்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடிய இவர்கள் சிக்கலின்றி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அவ்வப்போது பவுண்டரி, சிக்சர்களை ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய மன்ஜோத் கல்ரா சதம் விளாசி அசத்தினார். இதன் பின்னர் ஹர்விக் தேசாய், பந்தை பவுண்டரிக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்தார்.

இந்தியா 4-வது முறையாக சாம்பியன்

இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. மன்ஜோத் கல்ரா 102 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 101 ரன்களும், ஹர்விக் தேசாய் 61 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 47 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்திய வீரர்கள் மன்ஜோத் கல்ரா ஆட்டநாயகன் விருதும், சுப்மான் கில் (மொத்தம் 372 ரன்கள்) தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஜூனியர் உலக கோப்பையை அதிக முறை (4 தடவை) வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. ஏற்கனவே இந்திய அணி 2000-ம் ஆண்டில் முகமது கைப் தலைமையிலும், 2008-ம் ஆண்டில் விராட்கோலி தலைமையிலும், 2012-ம் ஆண்டில் உன்முக்சந்த் தலைமையிலும் இந்த ஜூனியர் உலக கோப்பையை உச்சி முகர்ந்து இருந்தது நினைவிருக்கலாம்.

2016-ம் ஆண்டில் இந்திய அணி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வெஸ்ட்இண்டீசிடம் கோப்பையை கோட்டை விட்டது. இந்த முறை தவறுக்கு இடமளிக்காமல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அமர்க்களப்படுத்தி இருக்கிறது. நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முன்னதாக லீக் ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் சாய்த்து தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டியுள்ளது.

வீரர்கள் ஆர்ப்பரிப்பு

இந்திய அணி வெற்றிக்கனியை பறித்ததும் வீரர்கள் மகிழ்ச்சியில் மைதானத்தில் துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தனர். கோப்பை கைக்கு வந்ததும் வீரர்கள் அனைவரும் அதனை ஓட்டமாக கொண்டு சென்று தலைமை பயிற்சியாளர் டிராவிட்டிடம் சமர்ப்பித்தனர். வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

‘இன்னும் நிறைய சாதிப்பார்கள்’ -டிராவிட்

சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

‘நமது அணி வீரர்கள் களத்தில் எடுத்த முயற்சிகளை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். மறக்க முடியாத இந்த வெற்றி, வீரர்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இந்த ஒரு நினைவுகளுடன் அவர்கள் (வீரர்கள்) ஓய்ந்து விடமாட்டார்கள். வருங்காலத்தில் இன்னும் நிறைய மறக்க முடியாத நினைவுகளை (வெற்றிகள்) கொண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த இளம் அணியை உருவாக்க நிறைய கவனம் செலுத்தினோம். இதில் 7-8 உதவியாளர்கள் பெரும் பங்கு வகித்தனர். அவர்கள், வீரர்களுடன் கடந்த 14 மாதங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் அற்புதமானது. அந்த பயிற்சி குழுவில் நானும் ஒருவராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். எங்களை பொறுத்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்களுக்கு எல்லா வகையிலும் ஊக்கமளித்தோம். அவர்கள் களத்தில் அதனை கச்சிதமாக செய்து முடித்தனர்’ என்றார்.

இந்திய அணியின் கேப்டனான மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா கூறுகையில், ‘தற்போது எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு சந்தோஷத்தில் திளைக்கிறேன். இந்த வெற்றியின் அனைத்து புகழும் அணியின் உதவியாளர்களையே சாரும். குறிப்பாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மகத்தானது. அத்துடன் வீரர்களின் சிறப்பான பங்களிப்பையும் பாராட்டி ஆக வேண்டும். இறுதிப்போட்டியில் மன்ஜோத் கல்ரா அடித்த சதம் மிகவும் முக்கியமானது. இதே போல் தொடர் முழுவதும் சுப்மான் கில்லின் பேட்டிங் சூப்பராக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி பந்து வீச்சும் நன்றாக அமைந்தது’ என்றார்.


மேலும் செய்திகள்