பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

Update: 2018-04-16 21:45 GMT
புதுடெல்லி,

சர்வதேச பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா (678 புள்ளிகள்) 10 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். 21 வயதான மந்தனாவின் சிறந்த தரவரிசை இதுவாகும். இந்த ஆண்டில் மந்தனா தனது 9 ஆட்டங்களில் 531 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்செ பெர்ரி (744 புள்ளிகள்) முதலிடத்திலும், நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் (696 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங் (684 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீராங்கனைகள் மிதாலிராஜ் 7-வது இடமும், ஹர்மன்பிரீத் கவுர் 13-வது இடமும், தீப்தி ஷர்மா 16-வது இடமும் பிடித்துள்ளனர்.

பவுலிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் ஜூலன் கோஸ்வாமி 5-வது இடத்தையும், பூனம் 13-வது இடத்தையும், தீப்தி ஷர்மா 14-வது இடத்தையும், ஷிகா பாண்டே 17-வது இடத்தையும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 18-வது இடத்தையும், எக்தா பிஸ்தா 19-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் தீப்தி ஷர்மா 3-வது இடமும், ஜூலன் கோஸ்வாமி 17-வது இடமும், ஷிகா பாண்டே 18-வது இடமும், ஹர்மன்பிரீத் கவுர் 20-வது இடமும் பிடித்துள்ளனர். தீப்தி ஷர்மா 3-வது இடத்தை பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

மேலும் செய்திகள்