கிரிக்கெட்
ஐ.சி.சி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளது. #ICCODIRankings
கொல்கத்தா,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முடிவுகளின் தொகுப்பு அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)  வெளியிட்டுள்ளது.

இதன்படி இங்கிலாந்து அணி 125 புள்ளிகள் பெற்று இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. 2014-15 ஆம் ஆண்டுகளில் தான் எதிர்கொண்ட 25 ஒரு நாள் போட்டிகளில் வெறும் 7 ஒரு நாள் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, 2015-16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டு 50 சதவீத முன்னேற்றத்துடன் புது எழுச்சி பெற்று 8 புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தை அடைந்துள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. 2-ம் இடத்திலிருந்த தென்னாப்பிரிக்க அணி (113 புள்ளிகள்) 4 புள்ளிகளை இழந்து 3-ம் இடத்திலும், நியூசிலாந்து அணி ஒரு புள்ளி இழந்து 112 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளன. மேலும் ஏனைய வரிசைகளில் எந்தவித புள்ளிகளும் மாறாமல் முந்தைய நிலையிலேயே மற்ற அணிகள் நீடிப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இதில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 104 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலும் ஐ.சி.சி. தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் அணி 130 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (126 புள்ளிகள்) 2-ம் இடத்திலும், இந்திய அணி 121 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்திலும் உள்ளன. மேலும் நியூசிலாந்து (116 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (114 புள்ளிகள்), இங்கிலாந்து (111 புள்ளிகள்) பெற்று 4, 5 மற்றும் 6-ம் இடங்களிலும் உள்ளன.