4-வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.

Update: 2024-04-25 18:43 GMT

லாகூர்,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் ராபின்சன் மற்றும் புருண்டெல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் புருண்டெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தனது அரை சதத்தை பதிவுசெய்திருந்த ராபின்சன் 51 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறக்கிய சாப்மென் 8 ரன்களும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாக்ஸ்கிராப்ட் 34 ரன்களும், கேட்பன் பேர்ஸ்வெல் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அப்ரிதி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சயிம் அயூப் 20 ரன்களும், உஸ்மான் கான் 16 ரன்களும், ஷாதப் கான் 7 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதத்தை பதிவு செய்திருந்த பக்தர் சமான் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓரூர்கே 3 விக்கெட்டுகளும், பென் சியர்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்