கிரிக்கெட்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
 டப்ளின்,

பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. மழையால் முதல் நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இதனால் இந்த டெஸ்ட் போட்டி 4 நாள் அடிப்படையில் நடத்தப்பட்டது. 2-வது நாளில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 130 ரன்னில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. 180 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 4-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று பேட் செய்த அயர்லாந்து 339 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. கெவின் ஓ பிரையன் 118 ரன்கள் (217 பந்து, 12 பவுண்டரி) விளாசினார். அயர்லாந்து டெஸ்ட் அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பை கெவின் ஓ பிரையன் பெற்றார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 160 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக வீரரும், இன்ஜமாம் உல்-ஹக்கின் உறவினருமான இமாம் உல்-ஹக் (74 ரன், நாட்-அவுட்), பாபர் அசாம் (59 ரன்) அரைசதம் அடித்தனர். இது தான் அயர்லாந்து அணி பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.