ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி

ஐபிஎல் போட்டியில் முதலாவது தகுதி சுற்றில், ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று சென்னை அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. #IPL

Update: 2018-05-22 17:25 GMT
மும்பை,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பந்துவீச்சில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வரிசையாக 4 விக்கெட்களை வெறியேற்றியது. 6.4 வது ஓவரில் ஐதராபாத் அணி 50 ரன்கள் எடுத்து இருந்தது. இதனையடுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்களை எடுப்பதில் தீவிரம் காட்டியது. அதற்கு பலனும் கிடைத்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஆக களமிறங்கிய வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸூடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அணியின் ஸ்கோர் 24-ஆக இருக்கும் போது ரெய்னா கவுல் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேற, அதற்கு அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஐதராபாத் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து திணறிய சென்னை அணிக்கு, கடைசி 30 பந்துகளில் வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்டது.

இதனிடையே சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு ஐதராபாத் அணியினர் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணிக்கு அசத்தல் வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஐதராபாத் அணியின் சார்பாக சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்