ஐபிஎல்: கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறியது ராஜஸ்தான் அணி

கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Update: 2018-05-23 17:23 GMT
கொல்கத்தா,

ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நேரத்தில் ஷுப்மான் கில் 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரகானே மற்றும் ராகுல் திருப்பதி ஆகியோர் களமிறங்கினர். 20 ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் ராகுல் திருப்பதி வெளியேற, சஞ்சு சாம்சன் கேப்டன் ரகானேவுடன் இணைந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் ரன் வேகத்தில்  மந்தமான நிலையே தொடர்ந்தது. கொல்கத்தா அணியினரின் திறமையான பந்து வீச்சினால் ரன்களை சேர்க்க திணறிய ராஜஸ்தான் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களே சேர்த்தனர். இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.

கொல்கத்தா அணியின் சார்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், ப்ரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

மேலும் செய்திகள்