தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.

Update: 2018-05-23 22:00 GMT

ஜோகன்னஸ்பர்க், 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ் (வயது 34) ‘உலக கோப்பையை வெல்வதே கனவு, 2019–ம் ஆண்டு உலக கோப்பையை நோக்கி எனது லட்சியப்பயணம் தொடரும்’ என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘வீடியோ’ மூலம் பேசிய அவர், ‘நான் மிகவும் சேர்ந்து போய் விட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். உடனடியாக அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இது கடினமான முடிவு தான். நீண்ட சிந்தனைக்கு பிறகே இந்த முடிக்கு வந்தேன். அதுவும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது விலக வேண்டும் என்று விரும்பினேன். இவ்வளவு காலம் விளையாடி விட்டேன். இனி மற்றவர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான அபாரமான டெஸ்ட் வெற்றிகளுக்கு பிறகு இது தான் ஓய்வு பெறுவதற்குரிய நேரமாகும்.

வேறு லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் அதிகமாக சம்பாதிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தொடர்ச்சியாக விளையாடி நான் களைத்து போய் விட்டேன் என்பதே உண்மை. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. உள்நாட்டில் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

புதுமையான ஷாட்டுகளுக்கு சொந்தக்காரர்

நவீன கிரிக்கெட் அரங்கில் புதுமையான பல ஷாட்டுகளை அறிமுகப்படுத்திய பெருமை டிவில்லியர்சுக்கு உண்டு. அதனால் தான் அவரை ‘மிஸ்டர் 360 டிகிரி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அதாவது மைதானத்தின் எல்லா பக்கமும் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்கும் வல்லமை படைத்தவர் டிவில்லியர்ஸ். உலகின் அபாயகரமான, வியப்புக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ் என்பது சந்தேகமில்லை.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் எல்லைக்கோடு அருகே தாவி குதித்து ஒற்றைக்கையால் அவர் கேட்ச் செய்த விதம், ஸ்பைடர்மேனுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு சிலிர்க்க வைத்தது. திடீர் ஓய்வின் மூலம் அவரது உலக கோப்பை ஆசை, கானல் நீராகிப் போய் விட்டது.

அறிமுகம் எப்போது?

2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டிவில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் உள்பட 8,765 ரன்களும் (சராசரி 50.66), 228 ஒரு நாள் போட்டிகளில் 25 சதங்கள் உள்பட 9,577 ரன்களும் (சராசரி 53.50) 78 இருபது ஓவர் போட்டிகளில் 10 அரைசதங்களுடன் 1,672 ரன்களும் குவித்துள்ளார்.

காயம் காரணமாக 22 மாதங்கள் டெஸ்டில் இருந்து ஒதுங்கி இருந்த டிவில்லியர்ஸ் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் டெஸ்ட் களம் திரும்பினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளில் ஆடி 427 ரன்கள் சேர்த்து தொடரை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார்.

103 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள டிவில்லியர்சின் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி 59 ஆட்டங்களில் வெற்றியும், 39–ல் தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. சில ஆண்டுகள் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட டிவில்லியர்ஸ், முதுகுவலி காரணமாக கீப்பிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

ஐ.பி.எல்.–ல் தொடருவார்

தனது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டாலும் இன்னும் சில ஆண்டுகள் உள்ளூர் 20 ஓவர் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளார். இந்த சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களம் இறங்கிய டிவில்லியர்ஸ் 6 அரைசதங்கள் உள்பட 480 ரன்கள் (12 ஆட்டம்) எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்