ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது? தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2018-05-24 22:00 GMT

கொல்கத்தா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். தகுதி சுற்று

8 அணிகள் இடையிலான 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன்ரைசர்சும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்சும் இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள 2012, 2014–ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி, தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. அந்த அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் (490 ரன்), கிறிஸ் லின் (443 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (313 ரன்), சுனில் நரின் (331 ரன் மற்றும் 16 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். சுனில் நரினுடன், குல்தீப் யாதவும் (15 விக்கெட்) சுழலில் மிரட்டுகிறார். வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை 25 ரன்கள் வித்தியாசத்தில் விரட்டியடித்த கொல்கத்தா அணிக்கு மீண்டும் உள்ளூரில் ஆடுவது மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்.

தடுமாறும் ஐதராபாத்

2016–ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கலாம். ஆனால் கடைசி கட்டத்தில் அந்த அணி வெகுவாக தடுமாறிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களில் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சி இருக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் சென்னையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும்.

தோல்வியால் சற்று தளர்ந்து போய் உள்ள ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற முயற்சிக்கும். கேப்டன் வில்லியம்சன் (8 அரைசதத்துடன் 685 ரன்), ஷிகர் தவான் (437 ரன்) ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக விளங்குகிறார்கள். இவர்களை பொறுத்தே அந்த அணியின் ரன்வேட்டை அமையும். இவர்கள் சீக்கிரம் வீழ்ந்தால் ஐதராபாத் அணியின் நிலைமை சிக்கல் தான். இதே போல் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானைத் (18 ரன்) தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஓவருக்கு சராசரியாக 6.91 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள ரஷித்கான், இங்குள்ள ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வாகை சூடும் அணி 27–ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுடன் மல்லுகட்டும்.

அணி விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

கொல்கத்தா: சுனில் நரின், கிறிஸ் லின், உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்செல், ஜாவோன் சியர்லெஸ், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

ஐதராபாத்: ஷிகர் தவான், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, ‌ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், பிராத்வெய்ட், ரஷித்கான், புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ‌ஷர்மா.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்