கிரிக்கெட்
‘நாங்கள் வீழ்த்த விரும்பும் அணி!' -ரஷித்கான்

நாங்கள் பாகிஸ்தானை வீழ்த்துவதைப் பார்க்க எங்கள் மக்கள் ரொம்ப ரொம்ப ஆசைப்படுகிறார்கள் என்று ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் கூறினார்.
நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் அசத்தி அனேக மனங்களைக் கொள்ளைகொண்ட ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், அடுத்ததாக இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராகிறார்.

அவரது பேட்டி...

ஆப்கானிஸ்தானால் எப்படி உங்களைப் போன்ற பல தரமான சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்க முடிந்திருக்கிறது?

ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிக்கும் ஒரு பலம் இருக்கும். ஆப்கானிஸ்தான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் நாங்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியாவில் எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அதேபோல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கும். அம்மாதிரி, ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்த இயற்கையான திறமைக்கு, சர்வதேச அளவில் உயரும் அளவுக்கு கொஞ்சம் பட்டை தீட்டி, ஊக்கம், உற்சாகம் கொடுத்தால் போதும்.

உங்களின் ஆரம்ப நாட்கள், லெக்-ஸ்பின்னை தேர்ந்தெடுத்தது, அதில் விதவிதமாய் பந்து வீசும் திறமையை வளர்த்துக்கொண்டது குறித்துக் கூறுங்களேன்...

நான் மட்டுமல்ல, எனது சகோதரர்கள் ஏழு பேருமே நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள், கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். அவர்கள் உள்ளூரில்தான் விளையாடினார்களே தவிர, முதல்தர கிரிக்கெட்டில் அல்ல. நாங்கள் டி.வி.யில் பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டு, டென்னிஸ் பந்து கொண்டு விளையாடுவோம். ஆரம்பத்தில் எங்களுக்குத் தேவையான விளையாட்டு சாதனங்களைப் பெறுவது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடியபின் அந்நிலை மாறிவிட்டது. அதன்பின் இவ்விளையாட்டு எங்கள் நாட்டில் வெகுவாகப் பிரபலமாகிவிட்டது, தேவையான வசதிகள் கிடைக்க ஆரம்பித்தன. பெரிய வீரர்கள் டி.வி.யில் விளையாடுவதைப் பார்ப்பதே எனக்கு ஊக்கமாக அமைந்தது. நானும் ஒருநாள் நம் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று எண்ணுவேன். எனது சகோதரர்கள் எல்லோருமே லெக்-ஸ்பின் பந்து வீசுவார்கள். என் அண்ணன்களில் ஒருவர், ‘கிரிக்கெட்டில் உன்னால் பெரிய ஆளாக முடியும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

நீங்கள் ஆரம்பம் முதலே சுழற்பந்து வீச்சில்தான் கவனம் செலுத்தினீர்களா?

நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது பேட்ஸ்மேனாகவே இருந்தேன். தொடக்க வீரராக அல்லது ஒன் டவுன் பேட்ஸ்மேனாக ஆடிவந்த நான், பகுதிநேர பந்துவீச்சாளராகத்தான் இருந்தேன். காரணம் அப்போது, எனது லெக்-ஸ்பின்னில் எனக்கு நல்ல கட்டுப்பாடு இல்லை. ஒரு போட்டியில் இரண்டொரு ஓவர்கள் மட்டும் நான் வீசுவேன். நான் விளையாடிய முதல் சீசனில், 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அப்போது பேட்டிங்கில் என்னை 8-ம் நிலைக்கு இறக்கியவர்கள், இப்போது நீ ஒரு பந்துவீச்சாளர் என்றார்கள். பேட்டிங் அல்லது பவுலிங் எதனால் எனக்கு அணியில் இடம்கிடைக்கிறதோ அதில் கவனம் செலுத்துகிறேன் என்று நான் கூறினேன். அதன்படியே பந்துவீச்சில் அதிக அக்கறை செலுத்தி, கடுமையாக உழைக்கத் தொடங்கினேன்.

நீங்கள் உங்கள் பந்துவீச்சில் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்துவதில்லையே?

நான் மணிக்கட்டைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, விரல்களைப் பயன்படுத்துகிறேன். அதுதான் என்னை வித்தியாசப்படுத்துகிறது. விரல்களுக்குப் பதிலாக மணிக்கட்டைப் பயன்படுத்தினால் எனது பந்துவீச்சின் வேகம் குறைந்துவிடும். எனக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. எல்லாமே இயற்கையாக வந்ததுதான். நான் பேசிய பல லெக்-ஸ்பின்னர்களும், இப்படி யாரும் லெக்-ஸ்பின் பந்துவீசிப் பார்த்ததில்லை என்று வியப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் வன்முறைச் சூழலில், கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது எவ்வளவு கடினமான விஷயம்?

எங்கள் நாட்டில் நிலவும் வன்முறை குறித்து நாங்கள் கவலை அடைந்திருக்கிறோம். கடந்த மாதம் மட்டும் அங்கு மூன்று, நான்கு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவையெல்லாம் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. வெளிநாடுகளில் நாங்கள் நன்கு கிரிக்கெட் விளையாடி, எங்கள் மக்கள் முகங்களில் புன்னகையை வரவழைக்க விரும்புகிறோம். நாங்கள் நன்றாகவே விளையாடிக் கொண்டிருந்தாலும், எங்கள் நாட்டில் குண்டுவெடிப்பு தொடர்கிறது. இது சோகமானது. எங்கள் நாட்டுச் சூழ்நிலை வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் நாங்கள் எங்கள் முயற்சியைக் கைவிட மாட்டோம்.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை எந்த நாட்டு அணியை வீழ்த்த ரொம்ப ஆசைப்படுகிறீர்கள்?

நாங்கள் எல்லா பெரிய அணிகளையும் வீழ்த்த விரும்புகிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானை தோற்கடிக்க எண்ணுகிறோம். நாங்கள் பாகிஸ்தானை வீழ்த்துவதைப் பார்க்க எங்கள் மக்கள் ரொம்ப ரொம்ப ஆசைப்படுகிறார்கள்.

20 ஓவர் போட்டிகளைப் போல் அல்லாது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அதிக ஓவர்கள் வீச வேண்டும், பேட்ஸ்மேன்கள் அதிக ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டார்கள். இந்தச் சவாலுக்கு நீங்கள் எப்படித் தயாராகி இருக்கிறீர்கள்?

அபுதாபியில் இங்கிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். அப்போட்டியில் நான் தொடர்ந்து 35 ஓவர்கள் வீசினேன். அப்போது, நான் களைப்படைந்துவிட்டேனா என்று எங்கள் கேப்டன் கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதற்கு மறுத்துக்கொண்டே இருந்தேன். யதேச்சையாக பெரிய ஸ்கிரீனை பார்த்தபோதுதான் நான் 35 ஓவர்கள் பந்து வீசியிருப்பது தெரிந்தது. அப்போது வலைப் பயிற்சியிலும் நான் 2, 3 மணி நேரம் பந்துவீசியிருந்தேன். எனவே, அதிக நேரம் பந்து வீசுவது எனக்குப் பிரச்சினையல்ல.