கிரிக்கெட்
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: சன்டிமாலின் அப்பீல் தள்ளுபடி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார்.
பிரிட்ஜ்டவுன்,வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார். வாயில் இனிப்பை போட்டு மென்று, அந்த எச்சிலை வைத்து பந்தை தேய்த்தது வீடியோ காட்சியில் பதிவானது. இதையடுத்து சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஸ்ரீநாத் விதித்தார். இதை எதிர்த்து சன்டிமால் அப்பீல் செய்தார். அப்பீல் குறித்து ஐ.சி.சி.யால் நியமிக்கப்பட்ட ஆணையர் மைக்கேல் பெலோப் விசாரணை நடத்தினார். சன்டிமால் தரப்பில் சட்ட நிபுணர்களும் ஆஜராகினர். 4 மணி நேரம் நீடித்த விசாரணை முடிவில் சன்டிமாலின் அப்பீலை ஐ.சி.சி. ஆணையர் பெலோப் தள்ளுபடி செய்தார். இதனால் பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சன்டிமால் ஆட முடியாமல் போனது. அவருக்கு பதிலாக இலங்கை அணியை சுரங்கா லக்மல் வழிநடத்தினார்.