கிரிக்கெட்
இந்தியா-அயர்லாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று 20 ஓவர் கிரிக்கெட்டில் மோதுகின்றன.
டப்ளின்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும், அடுத்து வரும் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்வதற்குரிய ஒரு நம்பிக்கையை அளிக்கும். மறுபிரவேசம் செய்துள்ள சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கும். அதனால் இந்திய வீரர்கள் எதிரணியை மெத்தனமாக எடுத்துக்கொள்ளகூடாது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறது. இதில் இந்தியஅணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், டோனி, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ்.

அயர்லாந்து: கேரி வில்சன் (கேப்டன்), பால்பிர்னி, பீட்டர் சாஸ், ஜார்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில், ஆன்டி மெக்பிரைன், கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்ட்டர்பீல்டு, ஸ்டூவர்ட் பாய்ன்டிர், பாய்ட் ராங்கின், ஜேம்ஸ் ஷனோன், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.