வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி வெற்றி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

Update: 2018-06-27 22:15 GMT
பிரிட்ஜ்டவுன்,

இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்- இரவு ஆட்டம்) பிரிட்ஜ்டவுனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரன்னும், இலங்கை அணி 154 ரன்னும் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.

இதையடுத்து 50 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 31.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது.

பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இருந்தது. குசல் மென்டிஸ் 25 ரன்னுடனும், தில்ருவன் பெரேரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று முன்தினம் 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணி தொடர்ந்து ஆடியது. குசல் மென்டிஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் முதல் ஓவரிலேயே ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து குசல் பெரேரா, தில்ருவன் பெரேராவுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 40.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்ருவன் பெரேரா 23 ரன்னுடனும், குசல் பெரேரா 28 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து இருந்தது.

மேலும் செய்திகள்