இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி குல்தீப் யாதவுக்கு கோலி புகழாரம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2018-07-04 22:30 GMT

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுலின் சதமும், குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சும் இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது.

குல்தீப் யாதவ் மிரட்டல்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது.

இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்களுடன் (12 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது. இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் கேப்டன் மோர்கன் (7 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0), ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளீகரம் செய்ய இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது. அவரது மாயாஜால சுழற்பந்து வீச்சால் 200 ரன்களை நோக்கி பயணித்த இங்கிலாந்தின் ரன்வேகம் ஒரேயடியாக சரிவுக்குள்ளானது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 69 ரன்களும், ஜாசன் ராய் 30 ரன்களும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.

லோகேஷ் ராகுல் சதம்

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 4 ரன்னில் போல்டு ஆனாலும், 2–வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் அணியை நிமிர வைத்தனர். 17 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்த ராகுல், அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து கட்டினார். வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட்டின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். அபாரமாக ஆடிய ராகுல் தனது 2–வது சதத்தை நிறைவு செய்தார். அதன் தொடர்ச்சியாக கோலி, பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக ருசித்த 7–வது வெற்றி இதுவாகும். லோகேஷ் ராகுல் 101 ரன்களுடனும் (54 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது 20 ஓவர் போட்டி கார்டிப்பில் நாளை நடக்கிறது.

கோலி, மோர்கன் கருத்து

இங்கிலாந்து பயணத்தை வெற்றியுடன் தொடங்கிய பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘சில இளம் வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாடியது மிகவும் திருப்தி அளிக்கிறது. உலக கோப்பை போட்டியை மனதில் கொண்டு பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம். அதன்படி லோகேஷ் ராகுல் 3–வது வரிசையிலும், நான் 4–வது வரிசையிலும் இறங்கினோம்.

மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி பந்தை சுழலச் செய்யக்கூடிய குல்தீப் யாதவ் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை நமக்கு சாதகமாக மாற்றி விட்டார். அவரது ‘ராங் அன்’ வகை பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதே போல் தொடர்ந்து கலக்குவார் என்று நம்புகிறேன்’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘குல்தீப் யாதவ் அற்புதமான ஒரு பந்து வீச்சாளர். இந்த தொடரில் அவர் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதை அறிவோம். 4 பந்தில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது பந்துவீச்சில் முற்றிலும் ஏமாந்து விட்டோம். இதனால் எதிர்பார்த்ததை விட 30 முதல் 40 ரன்கள் குறைந்து போனது. அவரது பந்து வீச்சை இதை விட எங்களால் சிறப்பாக சமாளிக்க முடியும். அடுத்து வரும் ஆட்டங்களில் எங்களது அணுகுமுறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.’ என்றார்.

ஆட்டநாயகன் பேட்டி

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘இது தான் எனது முதல் இங்கிலாந்து பயணமாகும். சீதோஷ்ண நிலை சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தந்தது. ஆடுகளம் நன்கு உலர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையிலேயே காணப்பட்டது. நான் முதல் ஓவரை வீசிய போது, இந்த ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பும் என்று உணர்ந்தேன். ‘ராங் அன்’ வகையில் பவுலிங் செய்யும் போது (லெக்–ஸ்பின்னர், ஆப்–ஸ்பின்னர் போல் பந்தை சுழட்டி விடுவது) பந்தை துல்லியமாக வீசுவது முக்கியமாகும். மூத்த வீரர்கள் கோலியும், டோனியும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். எனது பந்து வீச்சில் சிக்சர் விளாசப்படுவது குறித்து ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. சிறுவயதில் இருந்தே அது பழக்கப்பட்ட ஒன்று. அதனால் எனது ஓவரில் சிக்சர் அடிக்கப்படும் போது நெருக்கடிக்குள்ளாவதில்லை’ என்றார்.

2 ஆயிரம் ரன்களை கடந்தார், விராட் கோலி

*இந்திய கேப்டன் விராட் கோலி 8 ரன் எடுத்த போது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை தாண்டிய 4–வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதே சமயம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். கோலி இதுவரை 60 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 56 இன்னிங்சில் களம் இறங்கி 18 அரைசதங்கள் உள்பட 2,012 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (2,271 ரன்), பிரன்டன் மெக்கல்லம் (2,140 ரன்), பாகிஸ்தானின் சோயிப் மாலிக் (2,051 ரன்) ஏற்கனவே 2 ஆயிரம் ரன்களை கடந்தவர்கள் ஆவர். இந்திய வீரர் ரோகித் சர்மா இன்னும் 19 ரன்கள் எடுத்தால் அவரும் இந்த பட்டியலில் இணைந்து விடுவார்.

* 20 ஓவர் கிரிக்கெட்டில் லோகேஷ் ராகுலின் 2–வது செஞ்சுரி இதுவாகும். ஏற்கனவே 2016–ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 110 ரன்கள் எடுத்துள்ளார். ராகுலை தவிர்த்து பார்த்தால், ரோகித்சர்மா (2 சதம்), சுரேஷ் ரெய்னா (ஒரு சதம்) ஆகிய இந்தியர்கள் மட்டுமே 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் கண்டுள்ளனர்.

*இந்த ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி, இரு வீரர்களை ஸ்டம்பிங் செய்தார். இதையடுத்து 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது ஸ்டம்பிங் எண்ணிக்கை 33 ஆக (91 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அதிகம் பேரை ஸ்டம்பிங் செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மலின் (32 ஸ்டம்பிங்) சாதனையை முறியடித்தார்.

மேலும் செய்திகள்