கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திருச்சி வாரியர்ஸ் அணி 2-வது வெற்றி

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
சென்னை,

8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கோபிநாத் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பரத் சங்கர், கேப்டன் பாபா இந்திரஜித் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அலெக்சாண்டர் வீசினார். 3-வது பந்தில் பரத் சங்கர் பவுண்டரி விரட்டி ரன் கணக்கை தொடங்கினார்.

3-வது ஓவரில் அலெக்சாண்டர் பந்து வீச்சில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பரத் சங்கர் (23 ரன்) அடுத்த ஓவரில் விஷால் பந்து வீச்சில் எம்.அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அரவிந்த் (1 ரன்), எம்.அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆகி வந்த வேகத்திலேயே நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 5 ஓவர்களில் 41 ரன்னாக இருந்தது. இதனை அடுத்து சுரேஷ்குமார், பாபா இந்திரஜித்துடன் இணைந்தார். முதலில் நிதானத்தை கடைப்பிடித்த சுரேஷ்குமார் பிறகு அதிரடி காட்டினார். பாபா இந்திரஜித்தும் அடித்து ஆடினார். இதனால் திருச்சி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சுரேஷ்குமார் அரை சதத்தை எட்டினார். சற்று நேரத்தில் பாபா இந்திரஜித்தும் அரைசதத்தை கடந்தார்.

அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 154 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. பாபா இந்திரஜித் 50 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் சித்தார்த் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட கணபதியும் விளாசினார். நிலைத்து நின்று ஆடிய சுரேஷ்குமார் (74 ரன்கள், 48 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன்) கடைசி ஓவரில் விஷால் பந்து வீச்சில் அருண்குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருச்சி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கணபதி 5 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் விஷால் 2 விக்கெட்டும், எம்.அஸ்வின், சித்தார்த் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அருண்குமார் 1 ரன்னிலும், கேப்டன் கோபிநாத் 11 ரன்னிலும், விக்கெட் கீப்பர் கார்த்திக் 5 ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 15 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆரம்ப கட்ட சரிவில் இருந்து மீண்டு வர சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி வரை கடுமையாக போராடியது. இருப்பினும் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களே எடுத்தது. இதனால் திருச்சி வாரியர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை ருசித்தது. திருச்சி அணி தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இருந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அதிகபட்சமாக ராகுல் 53 ரன்னும், சசிதேவ் 30 ரன்னும் எடுத்தனர். திருச்சி வாரியர்ஸ் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கணபதி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஒரு வீரர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இது 4-வது முறையாகும். ஆல்-ரவுண்டராக ஜொலித்த கணபதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.