டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி அணி முதல் வெற்றி காஞ்சி வீரன்சை வீழ்த்தியது

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை எளிதில் சாய்த்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

Update: 2018-07-19 22:30 GMT

நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை எளிதில் சாய்த்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளையும், காஞ்சி வீரன்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி கேப்டன் அனிருதா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் விஷால் வைத்யா நிலைத்து நின்று ஆட மறுமுனையில் வந்த பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். சித்தார்த் (0), கேப்டன் பாபா அபராஜித் (4 ரன்), விக்கெட் கீப்பர் லோகேஷ்வர் (3 ரன்), முகிலேஷ் (7 ரன்) ஆகியோர் வரிசையாக ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் காஞ்சி அணி 4 விக்கெட்டுக்கு 44 ரன்களுடன் தடுமாறியது.

காஞ்சி 145 ரன்

விக்கெட் வீழ்ச்சியால் நெருக்கடிக்குள்ளான அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடினர். அடுத்த 7 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. விஷால் வைத்யா தனது பங்குக்கு 40 ரன்கள் (34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

பின்வரிசையில் சஞ்சய் யாதவ் சிறிது நேரம் வேடிக்கை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். சுவாமிநாதனின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்க விட்ட சஞ்சய் யாதவ் (27 ரன், 13 பந்து, 4 சிக்சர்) மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆனார். இதே போல் சுப்பிரமணிய சிவா (18 ரன்), சாம் (19 ரன்), அஷ்வாத் (17 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க அந்த அணி ஓரளவு சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

20 ஓவர் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

அனிருதா அதிரடி

அடுத்து களம் இறங்கிய காரைக்குடி அணியில் கேப்டன் அனிருதா சிக்சர் மழை பொழிந்து வெற்றி வாய்ப்பை சுலபமாக்கினார். அந்த அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை ருசித்தது. அனிருதா 93 ரன்களுடன் (49 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பாப்னா 24 ரன்களும், சீனிவாசன் 19 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். காஞ்சி வீரன்சுக்கு இது 2-வது தோல்வியாகும்.

மேலும் செய்திகள்