கிரிக்கெட்
ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு

உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு பெறுகிறார்.
மும்பை,

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பேசுகையில், ‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் நான் விளையாடுவதை பார்க்க முடியாது. எனது அனுபவம் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் என்னால் முடிந்த காலம் வரை தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பந்து வீசக்கூடிய கையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல. தற்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் காயம் பிரச்சினை எதுவும் இல்லாமல் விளையாடினேன். வேகமாக என்னால் பந்து வீச முடிந்தது. விக்கெட் வீழ்த்துவதில் உத்தரவாதம் கிடையாது. முழு உடல் தகுதியுடன் களம் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கை ஆடுகளம் கடினமாக இருந்தது. இலங்கை அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது கேலிக்குரியதாகும்’ என்று தெரிவித்தார்.