‘மைக்கேல் வாகனின் விமர்சனம் முட்டாள்தனமானது’ இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் பதிலடி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2018-07-28 00:24 GMT
பர்மிங்காம்,

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அடில் ரஷித் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத அடில் ரஷித்தை இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்த்து இருப்பதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘டெஸ்ட் அணிக்கு அடில் ரஷித்தை தேர்வு செய்து இருப்பது கேலிக்குரியதாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மைக்கேல் வாகனின் விமர்சனத்துக்கு அடில் ரஷித் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அடில் ரஷித் அளித்த பேட்டியில், ‘மைக்கேல் வாகனின் விமர்சனம் முட்டாள்தனமானது. இதுபோல் மைக்கேல் வாகன் நிறைய பேசி வருகிறார். தன்னுடைய கருத்தை மக்கள் கவனிக்கிறார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார். அவருடைய கருத்தை மக்கள் யாரும் ஆர்வமாக பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக திட்டம் போட்டு செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் பற்றி அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். களத்தில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அணிக்காக 100 சதவீத அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். நன்றாக சென்றால் மகிழ்ச்சி. நன்றாக செல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்