இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை

நடத்தை விதிமுறையை மீறியதால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

Update: 2018-07-28 00:29 GMT
கொழும்பு,

கொழும்பில் கடந்த 23-ந் தேதி முடிந்த இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான நடவடிக்கைக்கு காரணம் எதுவும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையில் குணதிலகாவுடன், அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி தங்கிய அவரது நண்பர் ஒருவர் நார்வே நாட்டு இளம்பெண்ணை கற்பழித்த புகாரில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் குணதிலகாவிடம் விசாரணை நடத்தினர். தான் தூங்கி கொண்டு இருந்ததால் நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் அவர் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டது உறுதியானது. இதனை அடுத்து குணதிலகா 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. அத்துடன் முந்தைய (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்) டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் உள்ளிட்ட எந்தவித சலுகையும் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் குணதிலகாவுக்கு 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்