கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார்: ரஹானே நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பர்மிங்காம், 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நேற்று அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி நன்றாக தயாராகி இருக்கிறது. போட்டி முடிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு நெருக்கடிக்கு ஆளாவதை விடுத்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இந்திய அணி அதிகம் கவனம் செலுத்தும். எங்கள் அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அதற்காக அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவை நாங்கள் மறக்கவில்லை. அவர்கள் எங்கள் அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி நம்மை விரைவாக மாற்றி கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் அலஸ்டயர் குக் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த 18 மாதங்களில் அடில் ரஷித் நல்ல முதிர்ச்சி கண்டுள்ளார். அவர் நல்ல நிலையில் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நெருக்கடியை சமாளித்து சிறப்பாக பந்து வீசுவார். அவர் தனது தேர்வு குறித்த விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் நேர்மறையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார்.