கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்:தூத்துக்குடியை சாய்த்தது திருச்சி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடியை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.
நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடியை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம்(திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திருச்சி வாரியர்சுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த திருச்சி கேப்டன் இந்திரஜித், முதலில் தூத்துக்குடியை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய தூத்துக்குடி அணிக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்னில், சோனுயாதவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். இதனால் தூத்துக்குடியின் ரன்வேகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. மற்றொரு தொடக்க வீரர் தினேஷ் 30 ரன்னில் ரன்-அவுட் ஆனார்.

தூத்துக்குடி 157 ரன்

மிடில் வரிசையில் ராஜகோபாலும் (41 ரன், 26 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), அபிஷேக்கும் (30 ரன், 27 பந்து, 2 சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். ஆனால் இறுதிகட்டத்தில் வெகுவாக தடுமாறிப்போனார்கள். கடைசி 4 ஓவர்களில் தூத்துக்குடி அணி வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. திருச்சி தரப்பில் சோனு யாதவ், டி.குமரன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திருச்சி வெற்றி

அடுத்து களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பரத் சங்கர் 51 ரன்களும் (7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் இந்திரஜித் 50 ரன்களும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கினர். 6-வது ஆட்டத்தில் ஆடிய திருச்சி அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

அதே சமயம் 6-வது லீக்கில் ஆடிய தூத்துக்குடி அணி சந்தித்த 3-வது தோல்வியாகும். தூத்துக்குடி அணி கடைசி லீக்கில் வருகிற 5-ந்தேதி காரைக்குடி காளையை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.