இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார், விராட்கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி நேற்று மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

Update: 2018-08-02 21:45 GMT

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி நேற்று மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் விராட்கோலி 23 ரன்னை எட்டிய போது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை எட்டிய 13–வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக 15–வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராட்கோலி உள்ளூரில் அந்த அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதாவது இந்திய மண்ணில் விராட்கோலி இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 சதம், 2 அரைசதம் உள்பட 843 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் கடந்த 2014–ம் ஆண்டில் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட்கோலி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் விராட்கோலி இங்கிலாந்து மண்ணில் மட்டும் இன்னும் சற்று தடுமாறி தான் வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் (2,535 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் கவாஸ்கர் (2,483), டிராவிட் (1,950), குண்டப்பா விஸ்வநாத் (1,880), வெங்சர்க்கார் (1,589), கபில்தேவ் (1,355), அசாருதீன் (1,278), விஜய் மஞ்ச்ரேகர் (1,181), டோனி (1,157), பரூக் என்ஜினீயர் (1,113), புஜாரா (1,061), ரவிசாஸ்திரி (1,026) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த பட்டியலில் விராட்கோலி இணைந்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்